பிரிட்டனில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2020ல் முடிவடைகிறது. ஆனால், பதவிக்காலம் முடியும் முன்னரே பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் தெரேசா மே முடிவு செய்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ள நிலையில், இன்று பிரதமர் தெரேசா மே தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜூன் 8-ம்தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும். நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதுதான் ஒரே வழி என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். எனது முடிவினை அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் நடவடிக்கைகளுக்கு அரசு தயாராகி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் அரசின் முன்னெடுப்புகளை முடக்குகின்றன. அதன் மூலம் பேச்சுவார்த்தைகள் பலவீனமடைகின்றன. பொதுத் தேர்தலை ஜூன் 8-ம் தேதி நடத்துவதற்கு வகை செய்யும் மசோதா கொண்டு வரப்படும்போது, அதை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரெக்சிட் தொடர்பான அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஸ்காட்லாந்து சுயாதீனமாக ஒரு பாதையை வகுக்கத் தொடங்கி உள்ள நிலையில், பிரதமரின் இந்த தேர்தல் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பான மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் சம்மதம் தெரிவித்திருப்பதால், இந்த மசோதாவை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.