இந்தியர்கள் அதிகளவில் பலன் பெற்றுவந்த ‘457 விசா’ திட்டத்தை திடீரென ரத்து செய்து ஆஸ்திரேலியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் திறமையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில், திறமைவாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களை ஆஸ்திரேலியா வரவேற்று வந்தது.
வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆஸ்திரேலியா வந்து 4 ஆண்டுகள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் ‘457 விசா திட்டம்’ என்ற பெயரில் விசாக்கள் வழங்கி வந்தது.
கடந்த ஆண்டு நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் இந்த ‘457 விசா’ திட்டத்தின் கீழ் வெளிநாடுகளை சேர்ந்த 95 ஆயிரத்து 758 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 24.6 சதவீதம்பேர் இந்தியர்கள்தான். அதாவது 4-ல் ஒரு வெளிநாட்டினர் இந்தியர். அதற்கு அடுத்த நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் 19.5 சதவீதம் பேரும், சீன நாட்டினர் 5.8 சதவீதம் பேரும் வசித்து வருகின்றனர்.
இந்த விசாக்களை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து சென்று ஐ.டி. என்னும் தகவல் தொழில் நுட்பத்துறை, மருத்துவத்துறை, விருந்து உபசரிப்பு (ஓட்டல்) துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவி வருகிறது. இதனால் உள்நாட்டினருக்கான வேலை வாய்ப்புகளை பெருக்குகிற விதத்தில் அந்த நாட்டு அரசு அதிரடியாக நேற்று ‘457 விசா’ திட்டத்தை ரத்து செய்துள்ளது.
இதுபற்றி ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியதாவது:-
எங்கள் நாடு குடியேற்ற நாடுதான். அது அப்படியே தொடர்கிறது. ஆனால் ஆஸ்திரேலிய வேலை வாய்ப்புகளில் ஆஸ்திரேலியர்களுக்கு முன்னுரிமை தந்தாக வேண்டி உள்ளது. எனவே நாங்கள் ‘457 விசா’ திட்டத்தை ரத்து செய்கிறோம்.
இனி இந்த விசாக்களை வழங்க மாட்டோம். ஆஸ்திரேலியா வேலை வாய்ப்புகள் ஆஸ்திரேலியர்களுக்கே வழங்கப்படும்.
திறன்வாய்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் முதலில், ஆஸ்திரேலியர்களுக்குத்தான் முதல் உரிமை என்ற அணுகுமுறையை நாங்கள் பின்பற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விசாக்களை ரத்து செய்தால் அடுத்து என்னதான் செய்வது என்றால், இதற்கு பதிலாக புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய தற்காலிக விசா திட்டத்தை அமல்படுத்துவோம் என்று பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறினார்.
ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் சமீபத்தில் இந்தியா வந்து தேசிய பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, கல்வி, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் 6 உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டு சென்ற நிலையில், இப்போது இந்தியர்கள் அதிகமாக பலன் பெற்று வந்த ‘457 விசா’ திட்டத்தை ரத்து செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.