வடமராட்சி, மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்துக்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்த த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், யாழ். குடாநாட்டு மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் மாற்றுவழியை கண்டறியுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மருதங்கேணி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பில் ஆய்வாளர்களால் விளக்கமளிக்கும் நிகழ்வு யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேத நாயகன் தலைமையில் நேற்றைய தினம் யாழ்.மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசத்தினருடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களு க்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மருதங்கேணி பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் மேற்கொள்வது தொடர்பில் சில வருடங்களாக முன்மொழிவு இருந்து வந்தது. அத்திட்டத்தை அமுல்படுத்தினால் அப்பகுதியில் உள்ள விசேட மீன்பிடி முறைகளில் பாதிப்பு ஏற்படும் என ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்புக்கள் இருந்து வந்தது.
ஆனால் விஞ்ஞான ரீதியில் விளக்கம் கொடுப்பதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்து ஆராய்ச்சி செய்து அதன் பெறுபேறுகள் அடிப்படையில் தீர்மானம் எடுப்பதற்கு தயார் என எதிர்ப்பு தெரிவித்த பகுதியினர் தெரிவித்திருந்தனர்.
நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆராய்ச்சி செய்யும் போது ஏனைய பகுதியினருக்கும் பாதிப்பு இல்லாமல் இருந்தால்தான் அத் திட் டத்தை செய்ய அனுமதி கொடுப்பதாக முடிவெடுத்திருந்தோம்.
ஆனால் வடமராட்சி கிழக்கு மீன்பிடி விசேட முறைகள் பாதிக்கப்படும் என்ற சந்தேகம் மேற்குறித்த ஆராய்ச்சியின் பெறுபேறுகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலை இத்திட்டம் பாதிக்கும் என்ற தீர்மானத்துக்கு வரக்கூடியதாக உள்ளது. இச் செயற்பாடு நிச்சயமாக கடற்தொழிலாளரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என திடமாக எமக்கு தெரியவருகிறது.
நாம் கேட்டுக்கொண்டதன் படி நன்னீரை பெறுவதற்கு வேறு ஒரு இடத்தில் சம்பந்தப்ப ட் டவர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. எனவே மருதங்கேணி பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை முற்று முழுதாக கைவிடுமாறு அரச அதிபருக்கு நாம் அறி வித்துள்ளோம்.
ஆறுமுகம் திட்டம் அமுல்படுத்துவதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் எமக்கு இல்லை. அதை செயற்படுத்த கோரியுள்ளோம் அத்திட்டத்தில் வரும் நீரை குடிநீருக்காக பயன்படுத்த முடியாது. குடாநாட்டு குடிநீர் பிரச்சினையை அதனால் தீர்க்க முடியாது.
எனவே மாற்று வழிகளை ஆராயச் சொல்லியுள்ளோம். மருதங்கேணி நன்னீராக்கும் திட்டத்தை இடைக்கால தீர்வாக செய்தால் கூட அது அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும்.
எனவே கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை விரைவாக செயற்படுத்த வேறு நீர் மூலத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
இன்றைய (நேற்று) எமது கலந்துரையாடலில் பிரச்சினைக்கான தீர்வு கண்டுபிடிக்க வில்லை, ஆனால் பிரச்சினை இன்னும் அதிகமாகியுள்ளது. மேற்குறித்த திட்டத்தை எடுத்த எடுப்பில் வேண்டாம் என்று சொன்ன மக்களை நாம் அமைதிப்படுத்தி பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய இணங்கவைத்தோம். பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்த போது அனுமதி கொடுக்க முடியாது. தற்போது கொடுக்கப்பட்ட ஆராய்ச்சி தரவின் அடிப்படை யில் இந்த இடத்தில் நடைமுறைப்பத்த முடியாது என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம் என சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
இரணைமடு குளத்தில் இருந்து நன்னீர் பெறும் திட்டத்தில் தாமதம் மற்றும் எதிர்ப்புக்கள் ஏற்பட்டதன் காரணமாக மருதங்கேணி கடலில் இருந்து நன்னீரை பெறும் திட்டத்தை மேற்கொள்வதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் முன்மொழிந்திருந்தனர்.
அதன் அடிப்படையில் குறித்த திட்டத்தினை மேற்கொள்வதற்கு பௌதிகவியல் சார் காரணிகளை ஆராய்வதற்கு அமெரிக்காவில் இருந்து நிபுணர் குழுவினரை வரவழைத்து ஒரு மாத காலமாக ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் குறித்த பகுதியில் மேற்குறித்த திட்டத்தினை ஆரம்பிக்க முடியும் என்றும் யாழ்.குடாநாட்டுக்கு இலகுவான முறையிலும் விரைவாகவும் குடிநீரை வழங்க முடியும் என்ற அறிக்கை முடிவின் பிரகாரம் மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இத்திட்டத்துக்கு பொதுமக்கள் தரப்பில் ஆதரவினை வழங்கியிருந்த போதும் ஒரு சிலர் ஆரம்ப காலத்தில் இருந்து எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.