ஜாகீர்கானை எனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன்: பேட் கம்மின்ஸ் சொல்கிறார்!

ஐ.பி.எல். தொடரில் இளம் வீரர்களை கொண்டு அசத்தி வரும் அணி டெல்லி டேர்டெவில்ஸ். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி தலா இரண்டு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக கடைசி ஓவரில் வெற்றி வாய்ப்பை இழந்தது. அந்த அணியின் கேப்டனாக அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கான் உள்ளார். இவருடன் ஆஸ்திரேலியாவின் அதிவேக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், மிஸ்ரா, கிறிஸ் மோரிஸ் பந்து வீச்சில் அசத்தி வருகிறார்கள்.

எந்தவித நெருக்கடியும் இல்லாமல் மகிழ்ச்சியாக ஜாகீர்கான் தலைமையில் விளையாடி வருவதாகவும், அவரை ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘என்னோடு ஜாகீர்கானை ஆஸ்திரேலியாவில் உள்ள எனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். அவருடன் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடி வருகிறேன். அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளரான கேப்டன் மட்டுமல்ல. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அவருடைய அனுபவம் முக்கியமானது. பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் சுதந்திரம் கொடுக்கிறார். வீரர்களின் பீல்டிங் நிலை மற்றும் பவுண்டரிகள் விட்டுக்கொடுப்பது தொடர்பாக பந்து வீச்சாளர்களுக்கு எந்த விதத்திலும் நெருக்கடி கொடுக்கமாட்டார்.

யார்க்கர் வீச விரும்பினால் யார்க்கர் வீசலாம், பவுன்சர் வீச விரும்பினால் பவுன்சர் வீசலாம். அந்த அளவிற்கு சுதந்திரம் கொடுத்துள்ளார்’’ என்றார்.