டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீர்ர என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல்!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். ‘சிக்சர் மன்னன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், டி20 கிரிக்கெட்டில் முடிசூடா மன்னராக விளங்கி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் டி20 சர்வதேச கிரிக்கெட் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் கெய்ல், உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் தொழில்முறை கிரிக்கெட்டான டி20 லீக்கில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

இந்த லீக் தொடர்களில் சிக்சர் மழை பொழிவதால் கெய்லுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 286 போட்டிகளில் 9937 ரன்கள் எடுத்திருந்தார். 63 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்னைக் கடக்கும் முதல் வீரர் என்ற அரிய சாதனையை படைக்கும் நோக்கத்தில் ஐ.பி.எல். சீசன் 2017-ல் களமிறங்கினார்.

சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் 32 ரன்னும், டெல்லிக்கெதிராக 6 ரன்னும், மும்பை அணிக்கெதிராக 22 ரன்களும் எடுத்திருந்தார். மூன்று போட்டிகளில் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று குஜராத் அணிக்கெதிராக களம் இறங்கினார்.

இந்த போட்டியில் 3 ரன்கள் எடுத்திருக்கும்போது 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து விளையாடிய கெய்ல் 38 பந்தில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார்.

டி20 போட்டிகளில் இந்த போட்டிக்கு முன்பு வரை 289 போட்டிகளில் 18 சதங்கள், 60 அரைசதங்கள் அடித்திருந்தார். இதில் 736 சிக்சர்களும், 764 பவுண்டரிகளும் அடங்கும்.