ஷாகித் அப்ரிடிக்கு இந்திய வீரர்களின் நெகிழ்ச்சியூட்டும் நினைவு பரிசு!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி 1996 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் களம் இறங்கினார். சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது ஆட்டத்திலேயே இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்தது உலக சாதனை படைத்திருந்தார். இந்த சாதனை 19 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாமலேயே இருந்தது குறிப்பிடத்தக்து.

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஷாகித் அப்ரிடி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற்றார். முன்னதாக பாகிஸ்தான் அணிக்காக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற  டி20 உலக கோப்பை போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.  டி20 உலக கோப்பை தொடர் நிறைவுற்றதும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த ஷாகித் அப்ரிடி தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வந்தார்.

27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷாகித் அப்ரிடி 1176 ரன்களை குவித்துள்ளார், அதிகபட்சமாக 156 ரன்களையும் 48 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 398 ஒரு நாள் போட்டிகளில் 8064 ரன்களை குவித்துள்ள ஷாகித் அப்ரிடி அதிகபட்சமாக 124 ரன்களையும், 395 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச அரங்கில் டி-20 போட்டிகளை பொருத்த வரை 98 போட்டிகளில் களம் கண்ட ஷாகித் அப்ரிடி 1405 ரன்களையும் 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

தற்போது ஷாகித் அப்ரிடி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்திய வீரர்கள் விராட் கோலி, யுவராஜ் சிங், ஆசிஷ் நெக்ரா, பும்ரா, ரெய்னா, நெகி, முகமது ஷமி, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ரகானே, தவான் உள்பட பல்வேறு இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்ட விராட் கோலி ஜெர்சியை அப்ரிடிக்கு பரிசாக வழங்கினார்கள்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் ஜெர்சியில் கையொப்பமிட்ட நினைவு பரிசை அப்ரிடிக்கு வழங்கியது குறித்து விராட் கோலி கூறியதாவது, “ஷாகித் பாய் வாழ்த்துக்கள், உங்களுக்கு எதிராக விளையாடியது எப்போதும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்”. இத்துடன் இந்திய வீரர்கள் வழங்கிய ஜெர்சியில் இதே வாசகம் எழுதப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்திய வீரர்கள் வழங்கிய ஜெர்சியின் புகைப்படத்தை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான தூதராக ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.