ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெய்ல் 77 ரன்களும் (38 பந்து, 5 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 64 ரன்களும் (50 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர்.
அடுத்து களம் இறங்கிய குஜராத் அணியில் பிரன்டன் மெக்கல்லம் (7 சிக்சருடன் 72 ரன்), இஷான் கிஷன் (16 பந்தில் 4 சிக்சருடன் 39 ரன்) ஆகியோர் கடுமையாக போராடிய போதிலும் இலக்கை நெருங்க முடிந்ததே தவிர அடைய முடியவில்லை. குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 192 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது.
இந்த ஆட்டத்தில் குறிப்பிடத்தக்க சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஐ.பி.எல்.-ல் பெங்களூரு அணி ஒரு இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 13-வது முறையாகும். இதன் மூலம் அதிக முறை 200 ரன்களை கடந்த சென்னை சூப்பர் கிங்சின் (12 முறை) சாதனையை முறியடித்தது.
கெய்ல் -கோலி கூட்டணி 122 ரன்கள் சேகரித்தது. முதல் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் 100 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 10-வது நிகழ்வாகும். 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில், தொடக்க விக்கெட்டுக்கு அதிக முறை ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ எடுத்த ஜோடி என்ற சிறப்பு இவர்களுக்கு கிடைத்தது.
மேலும் 37 வயதான வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் அரிய சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். அனைத்து வகையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை தொட்ட முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்தார்.
கெய்ல் இதுவரை 290 ஆட்டங்களில் விளையாடி 18 சதங்கள் உள்பட 10,074 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லம் 272 ஆட்டங்களில் 7 சதத்துடன் 7,596 ரன்கள் சேர்த்து 2-வது இடம் வகிக்கிறார்.
18-வது முறையாக கெய்ல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட வகையிலும் சாதனையே. ஐ.பி.எல்.-ல் அதிக தடவை ஆட்டநாயகன் விருதை பெற்றவர் இவர் தான். அடுத்த இடத்தில் கொல்கத்தா வீரர் யூசுப் பதான் (16 முறை) உள்ளார். வெற்றிக்கு பிறகு கெய்ல் கூறியதாவது:-
களம் இறங்குவதற்கு முன்பாக சக வீரர் சாமுவேல் பத்ரீ, இன்னும் 3 ரன்கள் எடுத்தால் போதும்; 20 ஓவர் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் மைல்கல்லை எட்டி விடுவீர்கள் என்பதை நினைவூட்டினார். அதனால் பேட் செய்த போது அதுவும் எனது மனதில் இருந்தது. சாதனையை கடந்த உடன், ‘இது அடித்து நொறுக்க வேண்டிய நேரம்’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டு செயலில் இறங்கினேன். முடிவில் அது நல்ல பலனை கொடுத்தது. இந்த ரன்களை எடுத்தது மனநிறைவை தருகிறது.
மக்கள் இன்னமும் கிறிஸ் கெய்ல் நம்மை குதூகலப்படுத்துவார் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது தான் எனக்கு உத்வேகம் அளிக்கிறது. டெஸ்டில் இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளேன். ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி உள்ளேன். இந்த ‘கிரிக்கெட் உலகின் ராஜா’ இன்னும் இங்கு தான் இருக்கிறார். ரசிகர்களுக்கு ரன்மழை பொழிந்து விருந்து படைக்கக்கூடிய திறமையுடன் தான் இருக்கிறார் என்பதை சொல்லிக்கொள்கிறேன். அதை தொடர்ந்து செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
மீண்டும் பார்முக்கு திரும்பியது சிறப்பான விஷயம். இந்த இன்னிங்சில் ரன் குவிப்பது, எனக்கு மிகவும் அவசியமாக இருந்தது. 10 ஆயிரம் ரன்களை முதல் வீரராக கடந்தது மிகப்பெரிய கவுரவம். அந்த சாதனையை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தில் ரசிகர்கள் மற்றும் நான் விளையாடிய அணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சில ஆயிரம் ரன்கள் என்னால் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு கெய்ல் கூறினார்.
பெங்களூரு கேப்டன் விராட் கோலி ஜாலியாக கெய்லிடம் நேர்காணல் நடத்தினார். அப்போது கெய்ல் கூறுகையில், ‘உங்களுடன் (கோலி) இணைந்து தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது இனிமையான உணர்வை தருகிறது. நீங்கள் ஒரு ஜாம்பவான். நிறைய ரன்கள் குவித்து வருகிறீர்கள். நீங்கள் ரன் எடுப்பதை எதிர்முனையில் நின்று கொண்டு பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது உண்மையில் கவுரவமாக கருதுகிறேன். வருங்காலத்தில் இன்னும் அதிக ரன்களை குவிப்பதற்கு, எனது இதயபூர்வமான வாழ்த்துகள். 10 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையை உங்களுடன் பகிர்ந்து கொண்டது அற்புதமான தருணமாகும்’ என்றார்.
விராட் கோலி கூறும் போது, ‘காயமடைந்த டிவில்லியர்சுக்கு பதிலாக ஆடிய கிறிஸ் கெய்ல் வாய்ப்பை நேர்த்தியாக பயன்படுத்திக் கொண்டார். 20 ஓவர் கிரிக்கெட்டில் மிகவும் அபாயகரமான ஒரு வீரர் கெய்ல். அவர் இது மாதிரி விளையாடினால், இன்னிங்ஸ் முழுவதும் நான் நிலைத்து நின்று ஆடுவதற்கு உதவிகரமாக இருக்கும். அது மாதிரியான சூழலில் பிற்பகுதியில் ரன்வேகத்தை தீவிரப்படுத்தினால் போதும்’ என்றார்.