தஞ்சாவூரில் உள்ள நாச்சியார் கோவில் என்ற இடத்தில் உள்ளது திருநறையூர் நம்பி ஆலயம். இந்த ஆலயம் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இவ்வாலய பெருமாள், ‘திரு நறையூர் நம்பி’ என்ற பெயரிலும், தாயார் வஞ்சுளவல்லி என்ற பெயரிலும் அருள்பாலித்து வருகின்றனர்.
பெருமாள் கருவறைக்கு முன்பாக வலது புறம் தனி சன்னிதியில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். உற்சவ காலத்தில் இங்குள்ள கல் கருடனே பெருமாளுக்கு வாகனமாக செல்லும் என்பது சிறப்பம்சம் வாய்ந்ததாகும். சன்னிதிகளில் இருக்கும் கருடாழ்வார் இதுபோல் வாகனமாக செல்வது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.
இந்த ஆலயத்தில் நடைபெறும் கருட சேவை மிகவும் பிரசித்திபெற்றது. கருடாழ்வாரே, ஆண்டாளின் தகப்பனாரான பெரியாழ்வார் அவதாரம் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள கருடாழ்வாருக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகு சாத்தி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். பட்டு வஸ்திரம் சாத்தி வழிபட்டால், எண்ணங்கள் ஈடேறும்.
ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கருடாழ்வாரை வணங்கினால், மகப்பேறு கிடைக்கும். திருமணம் கைகூடும். மேலும் விஷ ஜந்துக்களின் பயம் போகும். பொதுவாக எல்லா கருடனின் உடலிலும் எட்டு நாகங்களே ஆபரணங்களாக இருக்கும். ஆனால் இங்குள்ள கருடாழ்வாருக்கு ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாக விளங்குகின்றன.