கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தால் சூழலுக்கு எதுவித பாதிப்பும் இல்லை!

வடமராட்சி மருதங்கேணி தாழையடிக் கடற்பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்திட்டத்தை முன்னெடுப்பதால் சூழலுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனவும் இத்திட்டத்தால் மீன்வளம் பெருகும் எனவும் இவ்கடல் நீர் நன்னீராக்கும் செயற்திட்டத்தின் விளைவுகள் தொடர்பாக ஆராய்ந்த நாரா நிறுவனத்தின் சமுத்திரவியல் ஆய்வு பிரிவின் தலைவர் கலாநிதி கே.அருளானந்தம் தெரிவித்துள்ளார்.

இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்தால் அக் கடற்பிரதேசத்தை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பதாக தெரிவித்து இத்திட்டத்தை கைவிட வேண்டும் என நேற்று முன்தினம் யாழ். அரச அதிபருக்கு த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், குறித்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதனூடாக கடலில் மீன்வளம் அழிவடையாது எனவும் இத் திட்டமானது முன்னெடுப்பதில் எந்த விதமான பாதிப்புக்களும் இல்லையெனவும் சமுத்திரவியல் ஆய்வு பிரிவின் தலைவர் திடமாக கூறியுள்ளார்.

நேற்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற விஷேட பத்திரிகையாளர் சந்திப்பிலேயே நாரா நிறுவனத்தின் சமுத்திரவியல் ஆய்வு பிரிவின் தலைவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமது ஆய்வு தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

யாழ்ப்பாணத்தின் நன்னீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மருதங்கேணி தாழையடி கடற் பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை முன்மொழிந்திருந்தார்கள். இத்திட்டத்தினூடாக நாளொன்றுக்கு 25 ஆயிரம் கிபிக் மீற்றர் நீரை உற்பத்தி செய்து குடாநாட்டின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என முன்மொழியப்பட்டிருந்தது.

அந்தவகையில் இத்திட்டம் தொடர்பில் கடல் நுண்ணுயிர்களின் உருவாக்கல், கடல் நீரோட்டத்தின் மாற்றங்கள் கடல் அடிப்படுக்கைகளின் தன்மை போன்ற விடயங்கள் தொடர்பாக என் தலைமையிலான குழுவினர் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது.

இதன்படி எம்மால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது குறித்த கடற்பிரதேச மீனவ சமூகத்தால் மூன்று பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இத்திட்டத்தால் அப்பிரச்சினைகள் ஏற்படும் என கூறியிருந்தனர்.

அதாவது அவர்கள் கூறிய முதலாவது பிரச்சினை கடல் நீர் உள்ளீர்க்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் உப்பு செறிவு கூடிய நீர் வெளியேற்றப்படும் போது அவற்றால் கடல் நுண்ணுயிர்கள் பாதிப்படைந்து மீன்வளம் பாதிக்கும் எனவும் இரண்டாவதாக கடல் நீரை உள்ளீர்க்கும் குழாய்களும்இ மீதமான நீரை வெளியேற்றும் குழாய்களும் கடலில் அமைக்கப்படும் போது அவற்றால் தமது மீன்பிடி வலைகள் பாதிப்படையும் எனவும் மூன்றாவதாக கடல் நீரானது ஓர் சக்தியை பயன்படுத்தி உள்ளீர்க்கப்படும் போது நீரோடு சேர்ந்து மீன்களும் உள்ளீர்க்கப்படும் வாய்ப்புள்ளது ஆகிய மூன்று முக்கிய பிரச்சினைகளை குறிப்பிட்டிருந்தனர்.

இம் மக்கள் குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் நாம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட ஆய்வுகளின் ஊடாக முக்கியமான உண்மைகளை கண்டறிந்திருந்தோம். இதன்படி இவர்களது முதலாவது குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையின் கிழக்கு கரையோரத்தின் வங்காள விரிகுடாவையும் அரேபிய கடலுக்கும் இடையில் நீர் பரிமாற்றத்துக்கான வழிவகுக்கின்ற ஓர் நீரோட்ட பாதையாகவே இவ் தாழையடி கடற்பகுதி காணப்படுகின்றது.

இத்தகைய நிலையில் பருவகால மாற்றங்களின் போது நீரின் தன்மையில் மாற்றங்கள் ஏற்படும். இவற்றைவிட சில காலங்களில் நீரோட்ட திசைகள் கூட மாற்றமடைவதை எமது ஆய்வில் கண்டறிந்திருந்தோம். இச் சந்தர்ப்பங்களில் நீரின் உப்பு தன்மையின் அளவானது மாற்றமடைந்தே இருக்கும்.

இங்கே குறித்த செயற்திட்டத்தை முன்னெடுக்கும் போது சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது 22 மீற்றர் தூரத்திற்கே அதன் கூடிய உப்பு செறிவான நீர் தாக்கத்தை செலுத்தும். இதனால் கடற்பரப்பில் 22மீற்றர்களுக்கே சற்று கூடிய உப்பு நீர் தன்மை காணப்படப்போகின்றது. அத்துடன் இவ் உப்பு தன்மை கூடிய நீரானது இரண்டு அலகாக காணப்படும். ஆனால் கடலில் பருவகாலத்தில் ஏற்படுகின்ற மாற்றத்தால் உப்பு தன்மையின் அளவின் மாற்றமானது ஆறு அலகாக காணப்படும்.

மேலும் கடலிலே கிழக்கு கரையோர கடலானது உற்பத்தி திறன் அதிகமாகவுள்ள தன் காரணம் அங்கே வெவ்வேறான கடல் நீரானது கலப்பதாலேயே அக் கடலானது அதிகளவு உற்பத்தி திறன் வாய்ந்ததாக உள் ளது. குறிப்பாக இருவேறான கடல் நீர் கலக்கின்ற முனைகளிலேயே அதிகளவான மீன் வளம் காணப்படும். அதேபோன்று இங்கேயும் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து சற்று கூடிய உப்பு தன்மையான நீர் வெளியேற் றப்படும் போது அதற்கு அண்மையாக உப்பு தன்மை குறைந்த நீரும் சேரும் போது இங்கேயும் மீன்வளமானது செழிப்பானதாக இருக்கும்.

இதேபோன்று அம் மக்களால் முன்வைக்கப்பட்ட இரண்டாவது பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து பார்க்கும் போது கடல் நீரை உள்ளீர்க்கும் மற்றும் வெளியேற்றும் குழாய்களானது கடல்அடிப்படுக்கையை ஆழமாக தோண்டி அவற்றின் கீழேயே பதிக்கப்பட வேண்டும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மாறாக நீரின் மேலாக உள்ளீர்க்கும் குழாயோ நீரை வெளியேற்றும் குழாயோ கடல் நீர் மட்டத்திலோ மேலாகவோ பதிக்கப்படமாட்டாது. இறுதியாக மூன்றாவது பிரச்சினை தொடர்பில் கடல் நீரை உள்ளீர்ப்பத ற்கு எந்தவொரு சக்தியையோ அல்லது இயந்திர பம்புகளையோ நாம் பயன்படுத்த போவதில்லை என ஆய்வில் குறிப்பிட்டுள்ளோம்.

மாறாக இயற்கையான புவியீர்ப்பு சக்தியை மாத்திரம் பயன்படுத்தி அதாவது அமுக்கம் கூடிய இடத்தில் இருந்து அமுக்கம் குறைந்த இடத்திற்கு நீர் பாயும் என்ற அடிப்படையில் புவியீர்ப்பு விசையை பயன்படுத்தியே இவ் கடல் நீரானது உள்ளீர்க்கப்படவுள்ளது. எனவே மக்கள் முன்வைத்த மூன்று பிரச்சி னைகளுக்கும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை.

இவ்வாறான நிலையில் எனது 25 வருடகால இத்துறை சார்ந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒரு அபிவிருத்தி வேலைத் திட்டம் இடம்பெறும் போது சுழலியலில் மாற்றமொன்று ஏற்படும். அவ் மாற்றமானது தாக்கமல்ல.

மேலும் இவ் கடல் நீரை நன்னீராக்கும் செயற்திட்டமானது முன்னெடுக்கப்படுவதனூடாக சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லையென்பதை திடமாக என்னால் கூற முடியும் என நாரா நிறுவனத்தின் சமுத்திரவியல் ஆய்வு பிரிவின் தலைவர் கலாநிதி கே.அருளானந்தம் தெரிவித்தார்.