ஒவ்வொரு வருடமும் நம் அருமை ஆண்டவருடைய பாடுகளையும், மரணத்தையும் நினைவு கூர்ந்து வருகிறோம். அந்த வகையில் விலைமதிக்க முடியாத சிலுவையின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நம் அருமை ஆண்டவர் வாழ்வளிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
வேதம் சொல்லுகிறது, “அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்” (யோவான் 19:17).
உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக நம் அருமை ஆண்டவர் பார சிலுவையை தம் தோளின் மேல் சுமந்தார். அவர் தம்முடைய சிலுவையை சுமந்ததினால் நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்கிற ஆசீர்வாதங்களை உங்களுக்காக எழுத விரும்புகிறேன். ஜெபத்தோடு வாசித்து சிலுவையின் ஆசீர்வாதங் களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
பாவங்களைச் சுமந்தார்
“அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார்” (ஏசா 53:11).
“அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்” (ஏசா 53:12).
சிலுவையில் நம் அருள்நாதர் நம் ஒவ்வொருவருக்காக அவர் செய்த மகா பெரிய தியாகம் என்னவெனில் எந்த ஒரு மனிதனும் பாவத்தோடு வாழ்வது தேவசித்தமில்லை. எல்லா மதத்திலும் பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. நமது ஆண்டவரோ நம் எல்லாருடைய பாவங்களைத் தம் மேல் ஏற்றுக்கொண்டு பரிகாரியாக மாறினார். அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்தபடியால் நாம் சுமக்க வேண்டிய அவசியமில்லை. அவருடைய சமூகத்தில் மனத்தாழ்மையாய் நம்முடைய சகல குற்றங்களையும் அறிக்கைச் செய்வதால் நம்முடைய எல்லா பாவங்களையும் மன்னித்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தை அதாவது இரட்சிப்பின் சந்தோஷத்தை நிச்சயம் அவர் நமக்குத் தருவார்.
“நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன். என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன். தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” (சங். 32:5).
இன்றுவரை உங்களுக்கு பாவமன்னிப்பின் நிச்சயம் இல்லையென்றால் மனதார உங்களுடைய சகல பாவங்களையும் தேவனுடைய சமூகத்தில் அறிக்கையிடுங்கள். நிச்சயம் உங்களுக்கு இரட்சிப்பை அளித்து சந்தோஷப்படுத்துவார்.
துக்கங்களைச் சுமந்தார்
“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” (ஏசா 53:4)
இந்த உலகம் பலவிதமான துக்கங்களில் மூழ்கிபோயிருக்கிறது. குடும்ப கவலை, தீராத வியாதி, கடன் பிரச்சினை, சமாதானமில்லாமை போன்ற பலவிதமான கஷ்டங்களில் அநேகர் சிக்கி துக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.
துக்கம் மன வேதனையையும், மனவேதனை பலவிதமான பிரச்சினைகளுக்கு நேராகவும் நம்மைக் கொண்டு போய்விடுகிறது. ஆனால், ஏதோ ஒரு துக்கம் உங்களைச் சூழ்ந்து இருக்குமென்றால் நம் அருமை ஆண்டவர் உங்கள் துக்கங்களை சிலுவையில் சுமந்து இருக்கிறார். ஆகவே நீங்கள் சுமக்க வேண்டிய அவசியமில்லை. எனவே உங்கள் எதிர்கால வாழ்வை ஆண்டவராகிய இயேசுவின் கையில் அர்ப்பணித்து விடுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் சகல துக்கங் களையும் சிலுவையில் சுமந்த இயேசுவை முதலாவது விசுவாசியுங்கள். மேலும், உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணியுங்கள். நிச்சயம் “உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்” (யோவான் 16:20)
நோய்களைச் சுமந்தார்
“அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய நோய்களைச் சுமந்தார்” (மத் 8:17)
உங்கள் சகல நோய்களை இயேசு சிலுவையில் சுமந்து தீர்த்தார். இந்நாட்களில் மனிதனோடு போராடுகிற மிக முக்கியமான பிரச்சினை வியாதியாகும். மருத்துவர் களால் குணப்படுத்தக்கூடிய வியாதியும் உண்டு, குணமாக்க முடியாத வியாதியும் உண்டு. இன்னும் அநேக வியாதிகளுக்கு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் மருத்துவம் திணறி வருகிறது.
வேதம் சொல்லுகிறது, ‘நம்முடைய சகல நோய்களையும் இயேசு சிலுவையில் சுமந்தார்’ என்று. அப்படியானால், ‘நாம் வியாதிகளை சுமக்க வேண்டிய அவசியமில்லை. அவரே நம்முடைய பரிகாரி, அவருடைய தழும்பு களால் குணமாகிறோம்” என ஏசாயா 53:5 கூறுகிறது.
விசுவாசத்தோடு உங்கள் வியாதிகளையும் பெல வீனங்களையும் தேவனிடத்தில் தெரியப்படுத்துங்கள். இயேசு என்னை குணமாக்குவார் என விசுவாசியுங்கள். நிச்சயம் உங்கள் வியாதி உங்களை விட்டு நீங்கும். நீங்கள் ஆரோக்கியமடைவீர்கள். இயேசு கிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்த சகல அற்புதங்களையும் இன்றும் செய்கிறார்.
ஆகவே மேற்கண்ட சிலுவையின் ஆசீர்வாதங்களை நீங்கள் அனைவரும் பெற்றுக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதே தேவசித்தம்.