டென்னிஸ் உலகில் வெற்றிகரமான வீராங்கனையாக வலம் வரும் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) உலக தரவரிசையில் தற்போது 2-வது இடம் வகிக்கிறார். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ள செரீனா, அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டுக்கு (24 கிராண்ட்ஸ்லாம் பட்டம்) அடுத்த இடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டிலேயே மார்கரெட் கோர்ட்டின் மகத்தான சாதனையை செரீனா முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இப்போதைக்கு இயலாது என்பது தெரிய வந்துள்ளது.
35 வயதான செரீனா வில்லியம்சும் அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஓஹானியனும் காதலித்து, டிசம்பர் மாதம் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் 7-வது முறையாக மகுடம் சூடிய செரீனா வில்லியம்ஸ் அதன் பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. கால்முட்டி காயத்தால் ஒதுங்கி இருப்பதாக கூறிய அவர் ஒஹானியனுடன் நேரத்தை செலவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் வயிறு சற்று பெருத்து இருப்பது போன்ற தனது புகைப்படத்தை வெளியிட்ட செரீனா அதில் 20 வாரங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவியது. உடனே அந்த படத்தை செரீனா நீக்கிவிட்டார்.
இதற்கிடையே, செரீனா கர்ப்பமாக இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் கெல்லி புஷ் நோவக் உறுதி செய்துள்ளார். இதனால் இந்த ஆண்டு முழுவதும் செரீனா விளையாட முடியாது. சொல்லப்போனால் அடுத்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனுக்கு முன்பு வரை அவர் களம் திரும்ப வாய்ப்பில்லை. தாயாகப் போகும் செரீனாவுக்கு சக வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். “நீங்கள் ஒரு அற்புதமான அம்மாவாக இருப்பீர்கள். உடல் நலத்தோடு இந்த பயணம் மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துகள்” என்று நம்பர் ஒன் வீராங்கனை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் கூறியுள்ளார்.
டென்னிசில் குழந்தை பெற்ற பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதித்த வீராங்கனைகள் உண்டு. ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட், எவோன் கூலாகாங், பெல்ஜியத்தின் கிம்கிலிஸ்டர்ஸ் போன்றோரை உதாரணமாக கூற முடியும். அந்த வரிசையில் செரீனாவும் இணைவாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்