ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் ஒரு சேர செய்து வருபவர் பரமேஸ்வரன். பிரம்ம தேவனாலும், மகாவிஷ்ணுவாலும் அடி முடி காண முடியாத ஜோதியாக நின்றவர். அத்தகைய ஈசனின், சரிபாதியாகவும், சக்தியாகவும் விளங்குபவர் பார்வதிதேவி. உயிர்களைப் பேணிக் காத்து, துன்பம் ஏற்படுகின்றன போது உயிர்களின் துயர் துடைத்து காப்பது இந்த அன்னையே.
பழங்காலத்தில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஆழங்களும் நிறையப்பெற்றதாக இருந்தது ‘மலையாளம்’ என்னும் பகுதி. இந்தப் பகுதியில் இருந்த திருவனந்தபுரம் என்ற இடம் காடாகக் கிடந்தது. இதனை ‘அனந்தன் காடு’ என்று அழைத்தனர். இந்த அனந்தன் காடு வழியாக பாய்ந்தோடிய நீலாற்றங்கரையில் யோகீஸ்வரர் என்ற முனிவர், பார்வதிதேவியை நினைத்து கடும் தவம் இருந்தார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்து செழித்திடவும், தான் முக்தி அடைந்திடவும் வேண்டி அந்த தவத்தை அவர் செய்து வந்தார்.
அவரது தவத்தை மெச்சிய பார்வதி தேவி, முனிவரின் கண் முன் தோன்றி அருள்பாலித்தாள். ‘இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுவோர், அனைத்து நலனும் பெற்றிடுவர்’ என்று ஆசி கூறி மறைந்தாள்.
முனிவரும் அம்பாள் தனக்கு எந்த வடிவில் காட்சி கொடுத்தாளோ, அதன்படியே தேவியின் சிலையை வடித்து வடதிசை நோக்கி பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் முக்தியடைந்தார்.
நாளடைவில் காடு அழிக்கப்பட்டது. பழைய இடமான அங்கு சிறைச்சாலை அமைந்தது. காலநிலை மாற்றத்தினாலும், பழமையை அழித்து புதுமையை புகுத்தும் ஆர்வத்தாலும் சிறைச்சாலையும் அழிந்துவிட்டது. இந்தப் பகுதி பழஞ்சிறை என்று அழைக்கப்பட்டது. அருள் சுரக்க தயங்காத அம்மனின் ஆலயம் அங்கே அழகாக அமைந்தது. கோவிலை உருவாக்கிய யோகீஸ்வரரின் சிலை, அம்பாள் முன்பாக இருப்பதைக் காணலாம். இங்கு வீற்றிருக்கும் பழஞ்சிறை தேவியானவள், கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக பார்க்கப்படுகிறாள்.
பழஞ்சிறை தேவியின் ஆலயம் அழகான சிற்பங்களால் அமைக்கப்பட்டுள்ளன. அன்னையின் கர்ப்பக்கிரகத்தை 17 யானைகளும், 6 சிங்கங்களும் சுமந்திருப்பது போன்று சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கர்ப்பக்கிரகத்தின் மேல் பகுதியில் மும்மூர்த்திகளும் தேவியருடன் இருப்பது போன்றும், கங்கையுடன் ஈசன் இருப்பது போன்றும் சிற்பங்கள் உள்ளன. கோவில் பிரகாரத்தில் தசாவதார சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இதுதவிர நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்மராட்சசன், மாடன் ஆகியோரது திருமேனிகள் இருக்கின்றன.
இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று ஆரம்பமாகும் திருவிழா சிறப்புக்குரியதாகும். இந்த திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சில பக்தர்கள், ‘தோற்றப்பாட்டு’ என்னும் பாடலைப் பாடுகின்றனர். அன்னைப் பார்வதி தேவியின் மகிமை இந்தப் பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலைப் பாடும் பக்தர்கள், 41 நாட்கள் விரதம் இருக்கின்றனர். இந்தப் பாடலைக் கேட்டாலே நமது பாவங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதே போல் மாசி மாதத்தின் ஆறாவது நாளில் இரவு ‘அத்தாழ பூஜை’ என்ற வழிபாடு நடக்கிறது. இதை கன்னியர் பூஜை என்கின்றனர். அம்மன் சிறு வயது தோற்றத்தில் அழகாக காட்சியளிப்பது போல், பெண் குழந்தைகள் வேடமிட்டுக் கொண்டு இந்த பூஜையில் பங்கேற்பார்கள். அதே நேரத்தில் சுமங்கலிப் பெண்கள் தங்களது தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள்.
அன்றைய தினம் நள்ளிரவு 1 மணிக்கு பூதபலி பூஜை என்ற நிகழ்வு நடைபெறும். அம்மன் அருள்பெற்ற அர்ச்சகர், தனது பாதங்களில் சிலம்பு அணிந்து, கரங்களில் திரிசூலம் ஏந்தி, மூவர்ண புதுப்பட்டு உடுத்தி, வாளுடன் பின்நோக்கி நடனமாடியபடி சென்று பூதகணங்களுக்கு நேரடியாக காலத்திற்கேற்றபடி பலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த பூதகண பூஜையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பஞ்ச பூதப் பொங்கல் :
மாசித் திருவிழாவின் 7-வது நாள் பூரம் நட்சத்திரத்தன்று, பஞ்சபூத பொங்கல் விழா நடத்தப்படுகிறது. பூமியின் கிடைக்கக்கூடிய மண்ணினால் (நிலம்) உருவாக்கப்பட்ட பானையில் கைகுத்தல் அரிசியை போடுகின்றனர். பானையில் தண்ணீர் (நீர்) விட்டு, மூன்றாவது பஞ்ச பூதமான நெருப்பைக் கொண்டு பொங்கல் தயாரிக்கப்படுகிறது. வாயு தத்துவத்தை உணர்த்தும் வகையில், அம்மனின் வாழ்த்தொலி, குரவையொலி போன்றவை எழுப்பப்படுகிறது. நெருப்பு கொண்டு தயாரிக்கப்படும் பொங்கல் வானத்தை (ஆகாயம்) நோக்கியபடி பொங்கி வழிகிறது. இதில் பஞ்ச பூதங்களும் அடங்கியிருப்பதால், இதனை ‘பஞ்சபூத பொங்கல்’ என்கிறார்கள்.
நவராத்திரி காலத்தில் இந்த அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த ஒன்பது நாட்களில் கோவில் முன்பு சண்டி ஹோமம் இடைவிடாது நடத்தப்படும். இது தவிர மார்கழி மாதத்தில் தேவிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சித்திரை விஷு வழிபாடு போன்றவையும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
இந்த தலத்தில் உள்ள நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். இந்த வழிபாட்டின் போது தேவிக்கு மாங்கல்யம் வாங்கி அணிவித்தால், மாங்கல்ய பாக்கியம் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
பழஞ்சிறை தேவிக்கு வஸ்திரம் அணிவித்து, அரளிப்பூ மாலை சாத்தி வழிபாடு செய்வதும் சிறப்பான பலனைத் தரும். இந்த அம்மனுக்கு தினமும் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. பழஞ்சிறை அம்மனை வழிபடுபவர்களுக்கு இன்னல்கள் எதுவும் ஏற்படாது என்பதுடன், அவர்களுக்கு மறு பிறவி என்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அம்பலத்தரா என்ற இடத்தில் இருக்கிறது பழஞ்சிறை தேவி கோவில்.