பாகுபலி-2 ரிலீஸ் பிரச்சினை: கன்னட மக்களுக்கு ராஜமௌலி வேண்டுகோள்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி-2 பாகம் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாய் வெளிவர காத்திருக்கிறது. இந்நிலையில், கர்நாகடத்தில் இப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று ஒருசில கன்னட அமைப்பினர் எதிர்ப்புக் கொடி காட்டி வருகின்றனர்.

காவிரி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து நடிகர் சத்யராஜ் பேசியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் அவர் நடித்துள்ள ‘பாகுபலி-2’ படத்தை கன்னடத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் போர்க்கொடி காட்டுகின்றனர்.

இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்காக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, கன்னட மக்களுக்கு வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, சத்யராஜ் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. 9 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பேசியதை வைத்து தற்போது இந்த படத்தை திரையிட விடமாட்டோம் என்று சொல்வது நியாயமற்றது. படத்தை தடை செய்வதால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. படக்குழுவினருக்குதான் பெரிய இழப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.