‘பாகுபலி-2’ படத்தை திரையிட எதிர்ப்பு: சத்யராஜ் கட்அவுட்டை தீவைத்து எரித்த கன்னட அமைப்பினர்

காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ் கன்னடர்களையும், கன்னட அமைப்புகளின் தலைவர்களையும் தரக்குறைவாக பேசியதாக கூறி, அவர் நடித்துள்ள ‘பாகுபலி-2‘ திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிடக் கூடாது என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ‘பாகுபலி-2‘ திரைப்படம் வருகிற 28-ந்தேதி நாடு முழுவதும் திரையிடப்பட உள்ளது. அன்றைய தேதி நடிகர் சத்யராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் கன்னட அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர் சத்யராஜின் உருவப்படம் அச்சிடப்பட்டிருந்த கட்-அவுட்டை தீவைத்து எரித்த காட்சி.

இதற்கிடையே நடிகர் சத்யராஜ் நடித்துள்ள ‘பாகுபலி-2‘ படத்தை கர்நாடகத்தில் திரையிடக் கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று கர்நாடக ரக்ஷண வேதிகே என்ற கன்னட அமைப்பு சார்பில் பெங்களூருவில் உள்ள கன்னட திரைப்பட வர்த்தக சபை முன்பு போராட்டம் நடந்தது.

அப்போது அவர்கள் நடிகர் சத்யராஜுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் கர்நாடகத்தில் நடிகர் சத்யராஜ் நடித்த ‘பாகுபலி-2‘ படத்தை திரையிடக் கூடாது எனவும் கோஷம் போட்டனர். அந்த சமயத்தில் சிலர், நடிகர் சத்யராஜின் உருவப்படம் அச்சிடப்பட்டிருந்த கட்- அவுட்டை தீவைத்து எரித்தனர்.