நடிகை சமந்தாவுக்கும், நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து, இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. இவர்கள் திருமணம் மே மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது. திருமண ஏற்பாடுகளில் இருவரின் பெற்றோர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சமந்தா-நாகசைதன்யா திருமணத்தை அக்டோபர் மாதத்துக்கு திடீரென்று தள்ளிவைத்து உள்ளனர். இதனை நாகசைதன்யாவின் உறவினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சமந்தாவும், நாகசைதன்யாவும் அதிக படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருவதே திருமணம் தள்ளிப்போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சமந்தா தற்போது விஜய்யின் 61-வது படத்தில் அவருக்கு ஜோடியாகவும், இரும்புத்திரை படத்தில் விஷால் ஜோடியாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்திலும் நடிக்கிறார். இரண்டு தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. இவற்றை அக்டோபர் மாதத்துக்குள் முடித்து விட திட்டமிட்டு உள்ளார்.
சமந்தாவின் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்களை வைத்து எளிமையாக நடந்தது. ஆனால் திருமணத்துக்கு தமிழ், தெலுங்கு பட உலகை சேர்ந்த முன்னணி நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட அனைவரையும் அழைக்க முடிவு செய்து உள்ளனர்.
பாலி தீவு அல்லது பாங்காக்கில் இவர்கள் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த முடிவையும் கைவிட்டு விட்டனர். ஐதராபாத்திலேயே திருமணம் நடக்க உள்ளது. சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்து-கிறிஸ்தவ முறைப்படி இரண்டு முறை இந்த திருமணம் நடக்க இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
நாகார்ஜுனாவின் இளைய மகனான அகிலுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரேயா என்பவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து திடீரென்று திருமணத்தை ரத்து செய்து விட்டனர். இதனால் தனது திருமணத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று சமந்தா அவசரம் காட்டி வந்த நிலையில், தற்போது அவரது திருமணமும் தள்ளிப்போய் இருக்கிறது.