அதிமுக பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்ய கோரும் ஓபிஎஸ் கோஷ்டி நாளை என் சொத்துகளையும் எழுதி தர சொல்வார்களோ என கடுகடுத்திருக்கிறார் சசிகலா.
அதிமுகவின் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் கோஷ்டிகள் இணைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக அதிமுகவில் இருந்து தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் சசிகலா உட்பட அவரது குடும்பத்தினர் 30க்கும் மேற்பட்டோரை ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இருந்து நீக்கியாக வேண்டும் என அடம்பிடிக்கிறது ஓபிஎஸ் கோஷ்டி. இதை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டாராம்.
சசிகலாவைப் பொறுத்தவரையில், தினகரனை விட்டுக் கொடுத்துவிட்டோம்.. இப்போது என்னுடைய பதவியையும் கேட்பதை ஏற்கவே முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இது தொடர்பாக தம்மை சந்தித்த நபர்களிடம் மிக கடுமையாகவே பேசியிருக்கிறார் சசிகலா.
ஒருகட்டத்தில், அவரு தினகரன் வேண்டாம்னு சொல்வாரு… என்னோட ராஜினாமா கேட்பாரு… நீங்களும் இங்க வந்து நிற்கிறீர்கள்.. இப்படியே போனால் என்னுடைய சொத்துகளையும் எழுதி கொடுக்க சொல்வாரா? என ஒருமையில் விமர்சித்திருக்கிறார் சசிகலா. ஜெயலலிதா நினைவிடத்தில் சபதம் செய்தபோது இருந்த கோபத்தைவிட அதிகமாக காட்டியிருக்கிறார் சசிகலா.
மேலும் உங்களுடைய சுயநலத்துக்காக ஒட்டுமொத்தமாக எங்களையெல்லாம் பழிவாங்க பார்க்கிறீங்களா? அப்படி ஒரு எண்ணத்துடன் என்னை யாரும் பார்க்கவும் வரகூடாது என கறாராக சொல்லி அனுப்பிவிட்டாராம் சசிகலா. இதனால் எடப்பாடி கோஷ்டி அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம்.