நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார்… இரட்டை இலையை மீட்பதே லட்சியம் : எடப்பாடி கோஷ்டி!

ஓபிஎஸ் அணியுடன் எந்த நிபந்தனையும் அற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் கூறியுள்ளனர். இரட்டை இலையை மீட்பதற்காக தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் இணைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதிமுகவின் சின்னம் பறிபோய் விடும் என்ற பயத்தால் டிடிவி தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அணியும் ஒன்று கூடலாம் என திட்டமிட்டது.

ஆனால் ஓபிஎஸ் அணி 2 நிபந்தனைகள் விதித்ததோடு சசிகலா, டிடிவி தினகரனிடம் ராஜினாமா கடிதம் வாங்கியே தீர வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியது. ஓபிஎஸ் அணியின் புதுப்புது நிபந்தனைகளால் திணறிப் போயுள்ளனர் எடப்பாடி அணியினர்.

இந்நிலையில் கட்சியினரின் கருத்தை கேட்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி உரையாடினார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், ஓபிஎஸ் அணியுடன் எந்த நிபந்தனையுமற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினார்.

மேலும்இ இரட்டை இலையை மீட்பதற்காக தொண்டர்களின் விருப்பத்திற்கேற்க ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.