சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அவை ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவில் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்தியா ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்தியா ஜூன் 4-ந்தேதி பாகிஸ்தானையும், 8-ந்தேதி இலங்கையையும், 11-ந்தேதி தென்ஆப்பிரிக்காவையும் சந்திக்கிறது.
இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் 6 பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. 28-ந்தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்தையும், 30-ந்தேதி அதே மைதானத்தில் வங்காள தேச அணியையும் எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். தொடர் மே 21-ந்தேதி முடிவடைகிறது. இந்த தொடர் முடிந்த உடனே இந்தியா இங்கிலாந்து புறப்பட்டுச் செல்லும். இந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களும் நடப்பு சாம்பியனான இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
‘ஏ’ பிரவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் வங்காள தேசம் அணிகள் இடம்பிடித்துள்ளன.