இன்றைக்கு வீடு வாங்குபவர்களில் பலர் வீட்டு கடன் மூலம்தான் வாங்குகிறார்கள். இதற்கு முக்கியம காரணமாக வருமான வரிச்சலுகை என்றும் சொல்லலாம். வீட்டு கடன் பெற்று அதை திருப்பி செலுத்துவதன் வாயிலாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். வரிச்சலுகைகள் கிடைப்பது பற்றிய பல்வேறு தகவல்களை இங்கே காணலாம்.
* வீட்டு கடன் பெற்று அதனை மாதாந்திர தவணைகளாக திருப்பி செலுத்தும்போது, ஒரு நிதி ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் வரையில் வட்டிக்கான வரி விலக்கு கிடைக்கும். மேலும், ஒரு லட்ச ரூபாய் வரையில் அசலை திருப்பி செலுத்தும்பட்சத்தில் வருமான வரி சட்டம் 80-சி பிரிவின் கீழ் வரி விலக்கும் பெற முடியும்.
* கணவன், மனைவி இருவரும் சேர்த்து ‘கூட்டுக்கடன்’ பெறும் பட்சத்தில், ஒவ்வொருவரும் ரூபாய் ரூ.1 லட்சத்து ஐம்பது ஆயிரம் வரையில் வட்டிக்கும், ரூபாய் ஒரு லட்சம் வரையில் அசலை திருப்பி செலுத்தியதற்கான பணத்திற்கும் வரி விலக்கு பெற இயலும்.
* குடும்ப உறுப்பினர்களோடு இணைந்து கூட்டுக்கடன் பெற முடிவெடுக்கும் சமயங்களில், பெற்றோர்களது வயது 55-க்குள் இருந்து, அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் வருமானம் பெறுபவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களை இணை கடன்தாரர்களாக சேர்த்து கடன் பெறலாம். அதற்கான வருமான வரி விலக்கு அவர்களது பங்களிப்புக்கேற்ப கிடைக்கும். மாதாமாதம் வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை சரியாக செலுத்த தவறினால் வங்கியினால் கணக்கிடப்படும் வட்டிக்கு வருமான வரி விலக்கு முழுமையாக கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.
* வாங்கிய வீட்டை சில ஆண்டுகள் கழித்து அவசியமான மராமத்து பணிகள் செய்வதற்காக வாங்கப்படும் கடன் தொகைக்கு ரூபாய் 30 ஆயிரம் வரையில் வரி விலக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
* ஒரு வீட்டை வாங்கி சில வருடங்கள் கழித்து கையில் உள்ள தொகை மற்றும் சேமிப்பு அல்லது வங்கி கடன் பெற்று இரண்டாவது வீட்டை வாங்கலாம். இரண்டாவது வீடு விலை அதிகமாக இருந்தால் வங்கியில் ‘பிரிட்ஜ் லோன்’ பெற்று வீட்டை வாங்கிக்கொள்ளலாம். மேற்கண்ட கடன் மற்றும் வீட்டுக்கான விரிவாக்க பணி ஆகியவற்றுக்கான கடன் பெற்றால் மூலதன வரி விலக்கு பெறலாம்.
* இரண்டாவது வீட்டுக்காக வங்கி கடன் வாங்கும்போது, அதற்குரிய வட்டிக்கான வரியை வாடகையிலிருந்து கழித்துக்கொள்ள இயலும். ஒரு மனை மட்டும் இருந்து அதை விற்று வீடு வாங்கினாலும் மூலதன ஆதாய வரி விலக்கு கிடைக்கும். ஆனால், சம்பந்தப்பட்டவருக்கு வேறு வீடு இருக்கக் கூடாது.
* வீட்டு மனைக்கான வங்கி கடனுக்கு வரிச்சலுகை இல்லை. வங்கியில் வீட்டு கடன் வாங்கும்போது மனையுடன் கூடிய வீடு வாங்கப்படும்போதுதான் கடன் தொகை மற்றும் வட்டிக்கு வரிச்சலுகை கிடைக்கும்.
* ஒரு வருடத்துக்கு 30 சதவிகிதம் வருமான வரி கட்டிவரும் நிலையில் இரண்டாவது வீட்டை முற்றிலும் வங்கி கடன் மூலம் வாங்குவது பொருளாதார ரீதியாக சரியல்ல. அந்த வீடானது வாடகைக்கு விடப்படும்போது வாடகைக்கான வருமான வரி செலுத்துவதோடு, வீடு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மதிப்புள்ளதாக இருந்தால் செல்வ வரி செலுத்துவதும் முக்கியம்.