மீதொட்டமுல்ல குப்பைமேட்டு அனர்த்தத்தைத் தொடர்ந்து கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் உள்ள கொனாகொட – தேக்கவத்தயில் உள்ள பாரிய குப்பைமேடும் சரியக்கூடிய அபாயம் நிலவுகின்றது என மத்திய மாகாண சபையின் உறுப்பினரான சட்டத்தரணி அசங்க திலகவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்திருக்கும் ஏனைய தகவல்கள் வருமாறு,
இந்தக் குப்பைமேடு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கின்றது. இதன் பெரும்பாலான கழிவுகள் மகாவலி கங்கைக்குச் செல்கின்றன. வெகுவிரைவில் இது சரிந்து மகாவலி கங்கையில் விழலாம்.
அதைத் தடுப்பதற்கு முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் மீதொட்டமுல்ல அனர்த்தத்தைப் போன்ற மற்றொரு அனர்த்தம் நடக்க இடமுண்டு. இந்த இடத்தில் குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான கட்டடமொன்று நீண்டகாலத்துக்கு முன்பே கட்டப்பட்டது.
எனினும், இன்று அது பாழடைந்து போய்க் கிடக்கின்றது. நாளாந்தம் இந்தக் குப்பைமேட்டில் சுமார் 200 டிரக்டர்கள் கொண்டு வரும் குப்பைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநருக்கும் பலமுறை எடுத்துக்கூறியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்தக் குப்பைமேட்டின் வளவிலுள்ள கண்டி மாநகர சபை ஊழியர்களின் வீடுகளுக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் மத்திய மாகாண சபையின் உறுப்பினரான சட்டத்தரணி அசங்க திலகவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.