ஏழைகளின் பாதாம் என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன.
நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து வருகிறோம். அந்தவரிசையில் நிலக்கடலையையும் நாம் மறந்துவிட்டோம்
நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அதில் முக்கியமான சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்
நினைவாற்றல் அதிகரிக்கும்
இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.
மன அழுத்தம் போக்கும்
நிலக்கடலையில் டிரைப்டோபீன் (Tryptophen) என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.
கொழுப்பைக் குறைக்கும்
நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் அதிகம் உள்ளது.
நிலக்கடலையில் உள்ள தாமிரச் சத்து நமது உடலில் Low-density lipoprotei எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் High-density lipoprotein – HDL கொழுப்பை அதிகப்படுத்துகிறது.
பித்தப்பை கல் கரைக்கும்
நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.