சுற்றுலாப் பயணிகளிடமிருந்து இலங்கை அதிக வருமானத்தை ஈட்டி வருவதாக சவூதி அரேபிய ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை தேசிய விமான சேவையானது மத்திய கிழக்கிலிருந்து மேலும் ஊக்குவிப்பைப் பெற முயற்சிப்பதாகவும் குறித்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விமான சேவைக் கம்பனி இன்று (24) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இந்தப் பிராந்தியத்தில் புதிதாக சேவைகளை நடத்தவுள்ளது.
டுபாயிலுள்ள அரேபியன் ட்ரவல் மார்கெட்டில், ஏற்கெனவே ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் இருப்பது இதற்கு மிக வசதியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு, இந்திய உப-கண்டம், தூரக் கிழக்கு, தென் கிழக்கு ஆசியா ஆகிய பிராந்தியங்களை மிக சுமூகமாக இணைக்கும் வகையில், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், அமைவிடத்தைக் கொண்டுள்ளது.
இந்த விமான நிறுவனம், சுற்றுலாப் பயணிகளையும் வேலை நிமித்தம் பயணிப்போரையும், மத்திய கிழக்கு, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்குக் கொண்டு செல்வதில் சிறப்பாக செயலாற்றியுள்ளது.
தூரக் கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவுக்கு பயணிக்க மாற்று வழியாகவும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தற்போது பிரபலமாகி வருகின்றது.
விமானச் சேவைகளுக்கான கிராக்கி அதிகரித்துச் செல்லும் வேளையில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், இப்பிராந்தியங்களுக்கான சேவையை அதிகரித்துள்ளது.
இந்த வகையில், டுபாய், அபுடாபி, டோகா, றியாத், பாறின், குவைத் ஆகிய இடங்களுக்குத் தினமும் ஒரு சேவையை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நடத்தி வருகின்றது.
கேள்வியைப் பொறுத்து, வளைகுடாவில் ஏனைய பகுதிகளிலும் தனது சேவையை விஸ்தரிக்க ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் எதிர்பார்த்துள்ளது.