கடும் வறட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்பு!!

நாட்டில் தொடரும் வறட்சி காரணமாக 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய நீரைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குளங்களும், நீர்நிலைகளும் வற்றிப்போயுள்ளதால் பல மைல் தூரம் நடத்து சென்றே நீரைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

சிறுதானியச் செய்கை உட்பட விவசாய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல தாவரங்கள் நீரின்றி கருகி மடியும் நிலை உருவாகியுள்ளது. குளங்களும், நீர்நிலைகளும் நீரின்றிக் காணப்படுவதால் மீன்கள் செத்து மடிகின்றதுடன், வனவிலங்குகள் மக்கள் வாழும் பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன.

அதேவேளை, உஷ்ணமான காலநிலையால் பகல் நேரங்களில் வெளியில் வருவதற்கே மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். சரும ரீதியிலான நோய்களும் ஏற்படுகின்றன என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மதியம் வெளியிட்ட அறிக்கையில்,

வறட்சி காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 847 பேரும்,

மேல் மாகாணத்தில் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 322 பேரும்,

தென்மாகாணத்தில் 2 ஆயிரத்து 147 பேரும்,

வடமத்திய மாகாணத்தில் 11 ஆயிரத்து 276 பேரும், வடக்கு மாகாணத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 523 பேரும்,

சப்ரகமுவ மாகாணத்தில் 3 ஆயிரத்து 171 பேரும்,

வடமேல் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 671 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.