மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னையில் போயஸ் கார்டன் இல்லம், பல நிறுவனங்கள், இடங்கள் மற்றும் ஆந்திராவில் ஐதராபாத் திராட்சை தோட்டம், பையனுார் பங்களா, சிறுதாவூர் பங்களா என, எண்ணற்ற சொத்துகள் உள்ளன.
இவற்றில் அவருக்கு மிகவும் பிடித்தது, கோடநாடு எஸ்டேட் தான். கோடையிலும் இங்கு நிலவும் குளு குளு சீதோஷ்ண நிலையே இதற்கு காரணம்.
அரசியல் ரீதியான நெருக்கடி, வழக்குகளால் நிம்மதியிழப்பு என கவலைகள் அதிகரிக்கும் போதெல்லாம், அவர் அங்கு செல்வது வழக்கம். சசிகலாவும், உதவிக்கு ஒரு சிறுமியும் உடன் வருவதுண்டு. மாதக்கணக்கில் தங்கியிருந்து, அரசு நிர்வாகத்தை இங்கிருந்தே நடத்தியதும் உண்டு.
இதற்கான அனைத்து வசதிகளும், இந்த எஸ்டேட் வளாகத்தில் உள்ளன. 4,500 சதுர அடியில் 90க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட பங்களா உள்ளது. அதில், ஆடம்பர வசதிகள் ஏராளம்.
மினி சினிமா தியேட்டர், குட்டி படகுத்துறை, விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாக்கும் நான்கு, ‘ஸ்ட்ராங்க் ரூம்’கள் என சகல வசதிகளும் உள்ளன.
இந்நிலையிதான், இந்த கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காவலாளியை கொன்று, பங்களாவிற்குள் புகுந்த முகமூடி ஆசாமிகள், சில அறைகளின் பூட்டை உடைத்து, சூட்கேஸ்களுடன் கூடிய முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்று விட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பங்களாவில், ஜெயலலிதா பயன்படுத்திய பல அறைகள் உள்ளன. அந்த அறைகளில் இருந்த, முக்கிய ஆவணங்களுடன் கூடிய சூட்கேஸ்களை, அந்த கும்பல் துாக்கி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான, சென்னை அருகே திருப்போரூர் அடுத்துள்ள சிறுதாவூர் பங்களா வளாகத்தில் சமீபத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.