பொது வேலை நிறுத்தத்தை அமைதியாக நடத்திட வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்!!

யார் தூண்டுதலுக்கும் இடம் கொடுத்து விடாமல் விவசாயிகளுக்கான முழு அடைப்பு அறப் போராட்டத்தை ஜனநாயக முறையில் நடத்திட அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து முழு அடைப்பு அறப்போராட்டத்தை நடத்திட எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நாளை (25.4.2017) திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் நடத்தப்படும் முழு அடைப்புக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் அமோக ஆதரவு கிட்டியிருப்பதால், விவசாயிகள் துயர் நீக்கும் இந்த மாபெரும் “முழு அடைப்பு போராட்டம்” 200 சதவீதம் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

இதை உணர்ந்துள்ள விஷமிகள் யாரேனும் அனைத்து கட்சிகளின் இந்த முழு அடைப்பு போராட்டத்தை திசை திருப்ப முனையக் கூடும் என்று தலைமைக் கழகத்திற்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

ஆகவே பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி ஆகியோர் கற்றுக் கொடுத்த கடமை, கண்ணியம் கட்டுப்பாடு ஆகிய உன்னத கோட்பாடுகள் வழி நின்று முழு அடைப்பு போராட்டத்தை எந்தவித வன்முறைக்கும் இடம் தராமல் கழகத்தினர் வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று கழக நிர்வாகிகள் அனைவரையும் கேட்டு கொள்கிறேன்.

யார் தூண்டுதலுக்கும் இடம் கொடுத்து விடாமல் விவசாயிகளுக்கான முழு அடைப்பு அறப் போராட்டத்தை ஜனநாயக முறையில் நடத்திட அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து களத்தில் செயலாற்ற வேண்டும் என்றும், அமைதி வழியில் இந்தப் போராட்டத்தை நடத்தி விவசாயிகளின் கோரிக்கைகளை வென்று எடுக்க உதவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.