வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு போய்ச்சேரும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் கூட்டு போர் பயிற்சிக்காக ஜப்பானின் 2 போர்க்கப்பல்கள் வந்து சேர்ந்துள்ளன. இருப்பினும் வடகொரியா அடங்குவதாக இல்லை.அந்த நாட்டின் ஆளும் தொழிலாளர் கட்சியின் செய்தித்தாள் ‘ரோடாங் சின்மன்’, “நமது புரட்சிகர படைகள் அணுசக்தியால் இயங்கக்கூடிய அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்” என்று கூறி அமெரிக்காவை மிரட்டி உள்ளது.
இப்படி செய்வது, தனது படை பலத்தை வெளிக்காட்டுவதற்கு ஆதாரமாக அமையும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கிம் என்ற புனைப்பெயரால் அறியப்படுகிற கொரிய வம்சாவளி அமெரிக்கரை வடகொரியா கைது செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கைது செய்யப்பட்டிருப்பவர் யான்பியன் அறிவியல், தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.கிம் கைது உறுதி செய்யப்பட்டால் வடகொரியாவில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை 3 ஆக உயரும்.