சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு தரப்பு படைக்கும் கிளர்ச்சியாளர்கள் படைக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்ய படைகள் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட ரசாயன வான்வெளித் தாக்குதலில் சுமார் 90 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் உயிரிழந்தனர். ஏராளமானோர் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலை அதிபர் ஆசாத் தலைமையிலான சிரிய அரசு தான் மேற்கொண்டதாக கூறி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும் சிரிய அரசு மீதான இந்த குற்றச்சாட்டை ரஷ்யா ஏற்கவில்லை.
இந்நிலையில், ரசாயன குண்டு தாக்குதல் நடத்தியதற்காக சிரிய அரசு மீது கூடுதல் பொருளாதார தடை விதித்து அமெரிக்கா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிரியாவின் அறிவியல் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணி புரியும் 271 பேர் மீது தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுசின் கூறினார்.
தாக்குதல் நடத்தப்பட்ட 3 வாரங்களுக்கு பிறகு இந்த தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.