44-வது பிறந்த நாள்: சச்சின் தெண்டுல்கருக்கு கிரிக்கெட் உலகத்தினர் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு நேற்று 44-வது பிறந்த நாளாகும். மும்பையில் உள்ள தனது வீட்டில் தெண்டுல்கர் கேக் வெட்டி குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார்.

மாலையில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியினருடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி தெண்டுல்கருக்கு கிரிக்கெட் உலகத்தை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தனது வாழ்த்து பகிர்வில், ‘உலகம் கண்ட மிகவும் உத்வேகமான விளையாட்டு வீரர் சச்சின்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தனது வாழ்த்து செய்தியில், ‘கடவுள் உங்களுக்கு மேலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் அளிப்பாராக. எப்போதும் எனது கிரிக்கெட் ஹீரோ சச்சின் தான்’ என்று பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது வாழ்த்தில் கிரிக்கெட்டின் கதாநாயகன் சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், வீரர்கள் அஸ்வின், பிரக்யான் ஓஜா, ஹர்பஜன்சிங், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மைக்கேல் கிளார்க், கில்கிறிஸ்ட், இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் உள்பட பலரும் சச்சின் தெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.