உலக மாஸ்டர்ஸ் போட்டி: 100 மீட்டர் தூரத்தை 74 நொடிகளில் கடந்த 101 வயதான இந்திய பாட்டி

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் மான் கவுர் என்ற 101 வயதான மூதாட்டி 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டார். இவர் பந்தைய தூரத்தை 1 நிமிடம் 14 வினாடிகளில் (74 நொடிகளில்) கடந்து தங்க பதக்கம் வென்றார். இதே தூரத்தை 2009-ல் 64.42 வினாடிகளில் கடந்த சாதனைப் படைத்தவர்.

100 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் இவருடன் யாரும் கலந்து கொள்ள போட்டியாளர்கள் இல்லை. இருந்தாலும் போட்டி அமைப்பாளர்கள் அவரை ஓட சம்மதித்தனர். அவர் ஓடும்போது, நியூசிலாலந்து மீடியாக்கள் ‘சண்டிகரில் இருந்து ஒரு அதிசயம்’ என்று புகழ்ந்து தள்ளியது.

தீவிர மருத்துவ பரிசோதனைக்குப்பின் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார் மேன் கவுர். அவரது மகனுடன் சேர்ந்து ஏராளமான தடகள போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தை தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டம், இரண்டு கிலோ எடையுள்ள குண்டு எறிதல், 400 கிராம் எடைகொண்ட ஈட்டி எறிதல் போட்டிகளிலும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இந்த ஓட்டப்பந்தையத்தில் கலந்து கொண்டது மிகமிக மகிழ்ச்சியளிக்கிறது. நான் மீண்டும் ஓடுவேன் என்றார் கவுர். 93 வயது வரை மேன் கவுர் தடகளத்தில் கலந்து கொண்டது கிடையாது, அவரது மகன் குர்தேவ் சிங், சர்வதேச மாஸ்டர்ஸ் போட்டி வட்டாரத்தில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்தினார். இதனடிப்படையில்தான் தடகளத்தில் பங்கேற்று வருகிறார் கவுர்.