இயேசுவின் வழியே நமது வழி

இயேசு, தம் போதனைகள், மதிப்பீடுகளுக்கு எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்ற நம்மை அழைக்கிறார். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித கொலும்பானூஸ், உலக வாழ்வில் நாட்டம் இல்லாது இருந்தார். ஊருக்கு வெளியே தனிமையில் புனித வாழ்வு வாழ்ந்த ஒரு பெண்ணிடம் சென்று அறிவுரை கேட்டார். அதற்கு அந்த பெண், “நீ காட்டிற்கு சென்று தவம் செய் என்றார்“. ஆனால் புனித கொலும்பானூஸ் காட்டிற்கு சென்று இறைவனின் வழிகளை பின்பற்றி தவம் செய்து வாழ அவரது தாய் மறுத்தார்.

புனித கொலும்பானூஸ், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று அவரது தாய் வீட்டு வாசற்படியின் குறுக்கே படுத்துக்கொண்டார். அதையும் மீறி புனித கொலும்பானூஸ் இறைவனை தேடி தவ வாழ்க்கையை மேற்கொண்டார். அவ்வாறு நடந்த புனித கொலும்பானூஸ் வாழ்ந்த காலம் வேறு. ஆனால் இந்த காலத்தில் இயேசுவின் வழியைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் “நான்“, “எனது“, “எனக்கு“ என்ற வழிமுறைகளை கடந்து செல்ல வேண்டும். “நாம்“, “நமது“, “நமக்கு“ என்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆகவே, இயேசுவின் வழியே நமது வழியாக வேண்டும்.

இயேசு தாம் வாழ்ந்த சமுதாயத்தில் மக்கள் கடைபிடித்த அர்த்தமற்ற சம்பிரதாயங்களை, சட்டங்களை எதிர்த்தார். அவரது போதனைக்கும், வாழ்வுக்கும் இம்மியளவு கூட இடைவெளி இல்லாது வாழ்ந்தார். அவர் சீடர்களுக்கு, “பணிவிடை பெற அல்ல, பணிபுரியவே வந்தேன்“ என்றும் போதித்தார். இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற லட்சிய போராளியாக செயல்பட்டார். துணிவுடன் தம் புரட்சி போதனைகளை தொடர்ந்தார். சிலுவை சாவை ஏற்றார்.

“எனக்கு“ என்பது அழியும் போது “நமக்கு“ என்ற புதுவாழ்வு பிறக்கும். “எதைப்பெறுவேன்?“ என்பது நம்மில் இடம் பெறாத போது “எவ்வாறு கொடுக்கலாம்?“ என்ற நல்ல எண்ணம் நம்மில் வளரும். நம்மையே இழக்கும் போது நாம் “உயர்வு“ பெறுகிறோம். “வாழ்வு“ என்பது நாமே நமக்காக பாதுகாத்து கொள்வதற்காக அல்ல. மாறாக, “பிறருக்கும், கடவுளுக்கும்“ வழங்குவதற்காக என்பதை உணர்ந்து செபிப்போம், செயல்படுவோம்.