அளவற்ற நற்பலன்களை தரும் அட்சய திருதியை

நமது அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள், திதிகள் எல்லாம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக சில மாதங்களில் வரும் நட்சத்திரங்களும், திதிகளும் தனி சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதியை மகாலட்சுமிக்கு உரிய திருநாள் என்றே சாஸ்திரம் கூறுகிறது. அதிலும், குறிப்பாக தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை நாள் “அக்‌ஷய திருதியை” என்ற சிறப்பு பெயருடன் சிறப்பு மிக்க நாளாக போற்றப்படுகிறது.

அட்சயம் என்றால் என்றும் தேயாது, குறையாது, வளர்தல் என்ற பொருளை தருகிறது. அதனால் தான் அட்சயதிருதியை நாளில் நாம் செய்யும் நற்காரியங்கள் எல்லாம் பன்மடங்கு பெருகும். அதன் பலன்களும் நமக்கு பெருமளவு கிடைக்கும். வாங்கும் பொருட்களும் அழியாச்செல்வமாய் வீட்டில் தங்கி நிலைத்திருக்கும் என்பது ஆன்றோர் கருத்து. மகாகவி காளிதாசன் எழுதிய உத்திர காலாமிருதம் என்ற நூலில் திதிகளில் மிகவும் சிறப்பு மிக்கது திருதியை திதி என குறிப்பிடுகிறார். எல்லா நலன்களும் அள்ளி வழங்கும் திருதியை நன்னாள் அட்சய திருதியை திருநாள் ஆகும்.

ஜோதிட ரீதியாக பார்க்கும் போது நவக்கிரகங்களில் சூரியனை தந்தையாகவும், சந்திரனை தாயாகவும் அழைக்கின்றோம். இவ்விரண்டு கிரகங்களும் ஓரே நாளில் உச்சபலத்துடன் சஞ்சரிக்கும் காலம் தான் “அக்‌ஷயதிருதியை”. அதாவது மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நன்னாள். பெரியோர் அனைவரையும் வாழ்த்தும் போது சூரிய சந்திரர் போல் நிலைத்து வாழ்க என்று வாழ்த்துவர். அதாவது நீண்ட காலம் நிலைத்து வாழ சூரிய, சந்திரனும் வலுப்பெற்றிருப்பது மிக முக்கியம். எனவே தான் அப்படி வாழ்த்துகிறார்கள்.

மேலும் சூரியன் என்பவர் பிதுர்காரகர், சந்திரன் மாத்ருகாரகர் இவர்கள் இருவரும் பலம் பெற்றும் இருக்கும் நன்னாள் அக்‌ஷயதிருதியை என்பதால் அதில் நாம் மேற்கொள்ளும், பூஜைகளும், தானதர்மங்களும், தர்ப்பணங்களும், தொழில் மற்றும் திருமண நிகழ்வுகளும், பொருட்களை வாங்குதல் என அனைத்தும் பன்மடங்காகும், தான தர்மத்தின் மூலம் கிடைக்கும் பலன்களும் பன் மடங்கு பெருகி நம்மை வாழ்விக்கும். இந்நாளில் சிறப்பமிக்க பூஜைகளும், தானதர்மமும் செய்து பன்மடங்கு அருளை பெறுவோம்.

அட்சயதிருதியை நாளில் நாம் செய்யும் தானதர்மங்கள் அளவற்ற புண்ணியத்தை சேர்க்கும்.

“பிறருக்கு நாம் கொடுப்பதெல்லாம் தமக்கே தாம் கொடுத்து கொள்வது ” என்பதாகும் என்கிறார் ரமணர். அதாவது நாம் பிறருக்கு கொடுக்கும் தான தர்மங்கள் மூலம் நமக்கு அதற்கேற் பொருட்களும், புண்ணியங்களும் மீண்டும் கிடைக்கிறது. அதுபோல், பிறருக்கு தருகின்ற அளவிற்கு வசதி பெருக்கமும் அதிகரிக்கிறது. அட்சயதிருதியை நன்னாளில் சுயநலமான பணிகளை மேற்கொள்வதை விட பிறருக்கு தேவையான தர்மத்தை வழங்குவது நல்லது.

பள்ளியில் பயில முடியாத குழந்தைகளுக்கு கல்வி உபகரணம், புத்தகம் வாங்கிதருதல், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று உதவிடுதல், உணவற்ற ஏழைகளுக்கு உணவு வழங்குதல் போன்றவாறு உதவிகளை செய்தல் வேண்டும். தானதர்மம் செய்ய பெரிய செல்வந்தராக தான் இருத்தல் வேண்டும் என்பது இல்லை நம்மால் இயன்ற சிறு பொருளையாவது வழங்குவது மிக நன்மை பயக்கும். அக்‌ஷய திருதியை நன்னாளில் நீர்மோர், தயிர்சாதம், பானகம் போன்றவகளை கூட மக்களுக்கு தானமாக வழங்குதல் நல்ல பலன்களை தரும்.