தேச துரோக வழக்கில் கைதான வைகோவிற்கு ஜுன் 2-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

சென்னை ராணிசீதை மகாலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற ஆங்கில மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு பேசினார்.

இந்த விழாவில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் 13-வது குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு கடந்த 4-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் அல்லது இந்த வழக்கில் தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்தார்.

அவரை ஜாமீனில் செல்லும்படி கோர்ட்டு கேட்டுக்கொண்டதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு கோபிநாத் உத்தரவிட்டார். இதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, கடந்த 17-ந்தேதி எழும்பூர் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, இந்த தேச விரோத வழக்கை விசாரிக்கும் அதிகாரம் செசன்சு கோர்ட்டுக்கு தான் உள்ளது என்பதால், சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

வைகோவை வருகிற 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி நசீமாபானு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ, போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கை ஜூன் 2-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.