சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால்… நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை சாய் பக்தர்களிடையே சமீபகாலமாக மிக வேகமாக பரவி வருகிறது. பாபா ஆலயங்களுக்கு வரும் பக்தர்களில் பலர், “9 வாரம் விரதம் இருந்தேன். என் வேண்டுதல்களை சாய்பாபா நிறைவேற்றி வைத்து விட்டார்” என்று சொல்வதைக் கேட்க முடிகிறது.
சாய்பாபாவை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் மிக, மிக எளிதானது. சுலபமாக கடை பிடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதனால் 9 வாரம் வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.
ஆனால் 9 வார வியாழக்கிழமை விரத வழிபாடு பற்றி சீரடியில் உள்ள சாய்பாபா ஆலயம் எந்தவித தகவலையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. “விரதம் இருப்பது எப்படி?” என்ற குறிப்புகளையும் சீரடி ஆலயம் வெளியிட்டதே கிடையாது.
என்றாலும் இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் 9 வார சாய்பாபா விரத கதை புத்தகங்கள் வெளியாகியுள்ளது. எப்படி விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற சிறு, சிறு கையடக்கப் புத்தகங்களும் வெளி வந்த வண்ணம் உள்ளன.
இந்த விரத கதை எப்படி தோன்றியது? எப்படி உலகம் முழுவதும் உள்ள சாய் பக்தர்களிடம் பரவியது? என்றெல்லாம் தெரியவில்லை. இதையும் பாபா நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாக கருதுகிறார்கள். பக்தர்கள் மத்தியில் பரவியுள்ள அந்த விரத கதை வருமாறு:-
குஜராத் மாநிலத்தில் ஒரு ஊரில் மகேஷ்-கோகிலா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். மகேஷ் சற்று முரட்டுக்குணம் கொண்டவர். கோபம் வந்து விட்டால் வரை முறை இல்லாமல் பேசுவார்.
சிடுமூஞ்சியாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் அனைவரிடமும் அவர் சண்டையிட்டார். இதனால் அவர் குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் நல்ல உறவு இல்லாமல் இருந்தது. இது மகேஷ் செய்து வந்த வியாபாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
நாளடைவில் அவர் வருமானம் இல்லாமல் தவித்தார். குடும்பத்தில் அமைதியே இல்லாமல் போய்விட்டது. மகேஷ் குணத்தால் குழப்பம் அதிகரித்தது.
இந்த நிலையில் ஒரு நாள் அவர்கள் வீட்டு முன்பு சாது ஒருவர் வந்து நின்றார். அவர் கோகிலாவிடம், சாதம், பருப்பு கேட்டு வாங்கினார். பிறகு அவர், ஆசீர்வாதம் செய்தார்.
அப்போது கோகிலா, “என் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் உள்ளது” என்று கூறினார். அவர் கண்ணீர் விட்டதால் இரக்கப்பட்ட அந்த சாது, “சாய்பாபாவை வேண்டிக் கொண்டு 9 வாரம் வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால், நீ நினைத்தது நடக்கும்” என்றார். அதோடு 9 வாரம் வியாழக்கிழமை எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார்.
மேலும், “இந்த விரதம் கலியுகத்துக்கு ஏற்ற மிக உன்னதமான அற்புதங்கள் நிகழ்த்தும் விரதம். இந்த விரதத்தை தூய மனதுடன், நம்பிக்கையோடு யார் இருக்கிறார்களோ, அவர்களது அத்தனை ஆசைகளையும் பாபா நிறைவேற்றி வைப்பார். ஆனால் விரதம் இருப்பவர்கள் சாய்பாபா மீது உறுதியான நம்பிக்கையும், பொறுமையும் வைக்க வேண்டியது மிக, மிக அவசியம்” என்றும் தெரிவித்தார்.
அந்த சாது கூறியபடி கோகிலா 9 வாரம் வியாழக்கிழமை விரதம் இருந்தார். அதன் பிறகே மகேஷ் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டது. அவர் குணம் மாறியது. அவர் கடையில் வியாபாரம் அதிகரித்தது. குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.
இந்த நிலையில், கோகிலாவின் உறவினர்கள் சூரத்தில் இருந்து வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகள் ஒழுங்காக படிப்பது இல்லை என்றும் இதனால் தேர்வில் தோற்று விட்டனர் என்றும் கூறி வருத்தப்பட்டனர்.
அவர்களிடம் கோகிலா தான் மேற்கொண்ட 9 வார வியாழக்கிழமை விரதம் பற்றி கூறி அந்த விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்றார். சூரத் குடும்பத்தினரும் அந்த விரதத்தை கடைபிடித்தனர். 9 வார முடிவில் அவர்களின் குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் காணப்பட்டது.
இதற்கிடையே சூரத் குடும்பத்தினர் மூலம் தோழி ஒருவர் குடும்பத்தினருக்கு சாய்பாபாவின் 9 வார வியாழக்கிழமை விரதம் தெரிய வந்தது. அவர்களுக்கும் வெற்றி கிடைத்தது. சாய்பாபாவின் 9 வார வியாழக்கிழமை விரதம் இப்படித்தான் கொஞ்சம், கொஞ்சமாக பரவி நாடு முழுவதும் பக்தர்கள் மத்தியில் இரண்டற கலந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விரதம் இருப்பவர்கள் 9 வாரம் வியாழக்கிழமையும் ஒரு வேளை உணவு அருந்தி விரதம் இருக்க வேண்டும். பழவகைகள், குளிர் பானங்கள் சாப்பிடலாம் என்றெல்லாம் விரதத்துக்கு விதிமுறை களை உருவாக்கி யுள்ளனர். இது தவிர மேலும் சில விதிமுறைகள் உள்ளன.
ஒரு தூய ஆசனத்தில் மஞ்சள் துணியை விரித்து, சாய்பாபா படத்தை வைக்க வேண்டும். சந்தனம் பூச வேண்டும். மஞ்சள் நிறப்பூ சாத்த வேண்டும்.
பிறகு பாபாவுக்கு விளக்கு ஏற்றி, ஊதுபத்தி காட்டி வழிபட வேண்டும். ஆரத்தி எடுக்க வேண்டும். இதையடுத்து பாபாவின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும்.
இந்த விரதத்தை ஆண்-பெண் இரு பாலரும் கடை பிடிக்கலாம். விரதம் இருக்கும் 9 வியாழக் கிழமைகளில் காலை- மாலை இரு நேரமும் ஆலயத்துக்குச் சென்று பாபாவை வழிபடுவது நல்லது. வெளியூர் பயணம் செய்ய நேரிட்டாலும் இந்த விரதத்தை தொடரலாம்.
பெண்களுக்கு விலக்கு தொடர்பான உபாதைகள் ஏற்பட்டால் அந்த வாரம் விட்டு விட்டு, அடுத்த வாரம் விரதத்தை தொடரலாம். பெண்கள் இடையில் ஒரு வாரம் விரதம் இருக்க இயலாமல் போனாலும் பிரச்சினை இல்லை. இப்படி 9 வார விரதத்துக்கு சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை. இந்த விரத விதிகளுக்கு என்று உறுதியும் இல்லை. என்றாலும் உலகம் முழுவதும் உள்ள பாபா பக்தர்கள் இந்த விரத விதிமுறைகளை பாபாவே உத்தரவிட்டதாகக் கருதி கடை பிடிக்கிறார்கள்.
9-வது வாரம் விரதம் நிறைவு பெறும் போது, 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று ஒரு விதி உள்ளது. ஆனால் நிறைய பேரால் நேரடியாக உணவு அளிக்க முடிவதில்லை.
அத்தகைய நிலையில் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்படும் பாபா ஆலயங்களில், அதற்கான பணத்தை வழங்கலாம் என்று விரத விதிமுறைகளில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விரத முறைகளின் படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக நினைத்தது நடக்கும் என்பது சாய் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இந்த விரத நிறைவு விதிமுறைகளில் ஒன்று மட்டும் பலராலும் ஏற்புடையதாக இல்லை. அதாவது விரதத்தை பூர்த்தி செய்யும் 9-வது வியாழக்கிழமை விரத கதைகள் கொண்ட புத்தகத்தை 5 அல்லது 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் வாங்கி அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விதிமுறை இடைச்சொருகலாகக் கருதப்படுகிறது. சாய் சத் சரிதம், ஆரத்தி பாடல்கள் கொண்ட புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் விரத கதை கொண்ட புத்தகத்தை கண்டிப்பாக வாங்கிக் கொடுத்தே தீர வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
சாய் சத் சரிதம் உள்பட சீரடி ஆலயக் குறிப்புகள் எதிலும் இத்தகைய விரத விதிமுறைகள் இல்லை.இதன் காரணமாக பல சாய்பக்தர்களிடம் 9 வார வியாழக்கிழமைகளில் விரதம் இருக்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்த சந்தேகம் இயற்கையானதே.
9 வாரம் விரதம் இருந்தால் நினைத்ததை சாய் நடத்திக் காட்டுகிறார் என்று நிறைய பக்தர்கள் நம்பிக்கையோடு சொல்கிறார்கள். இதை நம்பித்தான் மற்றவர்களும் விரதம் இருக்கிறார்கள்.
ஆனால் விரதம் இருக்காவிட்டாலும், சாய் மீது முழு பக்தி வைத்திருந்தால், அவர்அற்புதங்கள் நிகழ்த்துவார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
சில பக்தர்கள், வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால், நாள் முழுக்க பாபா நினைவுடன் இருக்க முடிகிறது. எனவே பாபாவை நெருங்குவதற்கு இந்த விரதம் உதவியாக இருக்கிறது என்கிறார்கள். இது ஏற்கக் கூடியதாக உள்ளது.
சிலர் பாபாவை சோதித்துப் பார்க்கும் வகையில் 9 வார வியாழக்கிழமை விரதத்தை கடை பிடிப்பதுண்டு. ஒரு போதும் அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அது விரதமாக இல்லாமல் விரோதமாக மாறி விடக்கூடும்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். விரதம் இருங்கள் என்று பாபா சொன்னதே இல்லை. எனவே பாபாவை வேண்டிக் கொண்டு விரதம் இருப்பதும், இருக்காததும் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது.
சாயிடம் நெருங்க வேண்டுமானால், அவர் அன்பை பரிபூரணமாக பெற வேண்டுமானால், அவர் மீது நம்பிக்கை வைப்பது ஒன்றே போதுமானது. இல்லை… நான் பாபாவுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று உங்கள் மனம் துடிக்கிறதா?