10-வது ஐ.பி.எல். போட்டியில் இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா அணி புனேயை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது.
புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.
கேப்டன் ஸ்டீவன் சுமித் 37 பந்தில் 51 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), ரகானே 41 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), திரிபாதி 23 பந்தில் 38 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், சுனில்நரீன், உமேஷ் யாதவ், பியூஸ் சாவ்லா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 183 ரன் இலக்கை எளிதில் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் புனேயை வீழ்த்தியது. உத்தப்பா 47 பந்தில் 87 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்) கேப்டன் காம்பீர் 46 பந்தில் 62 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்தனர்.
கொல்கத்தா அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
கொல்கத்தாவும், மும்பை இந்தியன்சும் தலா 12 புள்ளியுடனும் உள்ளன. ரன்ரேட்டில் கொல்கத்தா முன்னிலையில் உள்ளது. மும்பை 2-வது இடத்தில் இருககிறது.
இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர் கூறியதாவது:-
சேசிங் செய்வதில் நாங்கள் சிறந்த அணியாக இருக்கிறோம். 182 ரன் இலக்கை எளிதில் எடுத்ததன் மூலம் எங்களால் எந்த இலக்கையும் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
புனே அணியை நாங்கள் 180 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறப்பானது. இதற்காக பந்து வீச்சாளர்களை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து புனே அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறியதாவது:-
182 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான். 2-வது பேட்டிங்கின் போது பனி துளி இருந்தது. இதனால் பேட்டிங் செய்வது மிக எளிதாக இருந்தது இதை பயன்படுத்தி கம்பீரும், உத்தப்பாவும் சிறப்பாக விளையாடினார்கள். ஸ்டோக்ஸ் ஆடாதது பாதிப்பே அவர் திறமை வாய்ந்த வீரர் ஆவார்.
சில கேட்சிக்களை தவற விட்டதும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எங்களது பீல்டிங்கில் முன்னேற்றம் தேவை. இனிவரும் ஆட்டங்களில் பீல்டிங்கில் மேம்பாடு ஏற்படும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.