நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, ஒரு முடிவில்லை, 3 தோல்வி என்று 9 புள்ளிகளை சேர்த்துள்ளது. உள்ளூரில் அசைக்க முடியாத அணியாக திகழும் ஐதராபாத் அணிக்கு 4 வெற்றிகளும் சொந்த ஊரில் (ஐதராபாத்) கிடைத்தவை தான்.
அதே சமயம் வெளியூரில் தடுமாறும் ஐதராபாத் அணி, அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் தயாராகி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐதராபாத் வீரர் யுவராஜ்சிங் இந்த ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை 3 வெற்றி, 4 தோல்விகளை சந்தித்துள்ளது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் அடி வாங்கிய பஞ்சாப் அணிக்கு குஜராத்துக்கு எதிரான வெற்றி மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது. சொந்த ஊரில் விளையாடுவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். ஏற்கனவே 5 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் தோற்றுள்ள பஞ்சாப் அணி, அதற்கு பழிதீர்க்க தீவிரம் காட்டும்.
காயத்தால் ஒதுங்கி இருந்த ஆல்-ரவுண்டர் டேரன் சேமி பஞ்சாப் அணியுடன் இணைந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் களம் காண வாய்ப்புள்ளது. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.