பூரண கடையடைப்பு செயற்பாட்டின் மூலம் மக்களால் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளை சர்வதேச சமூகமும், அரசும் அக்கறையோடு புரிந்து கொள்ளும் என நம்புகிறோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணப்பிள்ளை துரைராச சிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களால் மேற்கொள்ளப்பட்ட பூரண கடையடைப்பு செயற்பாட்டிற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கும் ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இன்றைய தினம்(27)(நேற்று) அழைப்பு விடுக்கப்பட்ட பூரண கடையடைப்பு வேண்டுகோள் தமிழ் மக்களால் பூரணமான முறையில் ஏற்று கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிற்கு எமது அணுசரணையும் இருந்தது. எமது இந்த அணுசரணை அழைப்பினை ஏற்று இந்தக் கடையடைப்பு நிகழ்வு வெற்றி பெற ஒத்துழைத்த அனைத்து தமிழ் மக்களுக்கும் எமது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.
குறிப்பாக வர்த்தக சமூகங்கள், போக்குவரத்துத் துறையினர், மாணவர்கள், தொழிலாளர்கள், உத்தியோகஸ்த்தர்கள், உள்ளிட்ட அனைத்துப் பொது மக்களும் தங்கள் உணர்வார்ந்த ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.
இச் செயற்பாட்டின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்ற உணர்வுகளை சர்வதேச சமூகமும், அரசும் அக்கறையோடு புரிந்து கொள்ளும் என நம்புகின்றோம்.
எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தாம் நிறைவேற்றவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அரசு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசு கூடிய அக்கறை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதோடு, சர்வதேச சமுகம் இவ்வுணர்வினை மதித்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான செயற்பாடுகளுக்கு இன்னும் கூடுதலான அக்கறையையும், செயற்பாட்டுத் தண்மையையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
இதன் போது அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் 30ம் திகதி மாலை 03.00 மணியளவில் களுதாவளை கலாச்சார மண்டபத்தில் தந்தை செல்வா அவர்களின் 40வது நினைவு தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை சோசலிசக் குடியரசின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஐயா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.அ. சுமந்திரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு தமிழர் தலைவருக்கு அகவணக்கம் செலுத்துவதோடு, அவர்தம் வரலாற்றுத் தடங்களையும், தமிழர் தம் அரசியல் நெறிமுறைகளையும் அறிந்து தெளிவடையுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
அத்துடன் எதிர்வரும் 2017.05.01ம் திகதி அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பொது மைதானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொழிலாளர் தினமான மேதின நிகழ்வுகள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். எனவே இந்நிகழ்விலும் தமிழ் அபிமானிகள் கலந்து கொண்டு இந்நிகழ்வையும் சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.