கஞ்சா சுருட்டுடன் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி

பல்கலைக்கழக மாணவிகளின் சமூக விரோத செயல்கள் குறித்து பல்வேறு செய்திகளை ஊடகங்களின் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

உயர்கல்வியை கற்று நாட்டுக்கும் சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டிய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் போதைப் பழக்கங்களுக்கு உள்ளாகி வருவது சமூகத்தின் சீர்கேடு என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் கஞ்சா சுருட்டை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் புகைத்தமை ஆகிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவி, தனது காதலுனுடன் கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு அருகில் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஹூவளை பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவியும் காதலனும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இரண்டு பேருக்கும் தலா 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து நீதவான் எச்சரித்து விடுதலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின் சில உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள் மது, கஞ்சா போன்றவற்றை பழக்கப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.