லைக்கா நிறுவனத்தினால் கட்டப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது!

லைக்கா நிறுவனத்தினால் சின்ன அடம்பனில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது என பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் உள்ள 97 குடும்பங்கள் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் 1995, 1996ஆம் ஆண்டு கால பகுதியிலிருந்து தங்கியுள்ள மக்களுக்கு லைக்கா நிறுவனத்தினால் சின்ன அடம்பனில் 67 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அங்கு சென்று குடியேறுவதற்கு இந்த மக்களுக்கு திறப்புக்கள் மாவட்ட செயலகத்தினால் இன்று கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த பகுதியில் சென்று குடியேற முடியாது. எங்களுக்கான அடிப்படை வசதிகள் மின்சாரம், போக்குவரத்து, தண்ணீர், வைத்தியசாலை இன்றி அந்த பகுதியில் சென்று குடியேற முடியாது.

நாங்கள் கூலி வேலைகளையே நம்பி இருப்பதால் அங்கு சென்று வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது? எனவே எங்களை புளியங்குளம் பகுதியிலுள்ள லைக்கா நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட 85 வீடுகளில் குடியேற அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தமது கோரிக்கைக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் உங்களுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும் என்று தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களை வலுக்கட்டாயமாக அங்கு சென்று குடியேற வேண்டும் என்று தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.