விஜய், அஜித் படங்களை நெருங்க முடியாத பாகுபலி-2

பொதுவாக விஜய், அஜித் படங்கள் என்றால் சென்னையில் சில திரையரங்குகளில் அதிகாலை சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்வார்கள். அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் சிறப்புக்காட்சிக்கு ரசிகர்கள் கூட்டம் முண்டியடிக்கும். இதற்காக சில திரையரங்குகள் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 4 மணிக்கு முன்னதாக 1 மணிக்கெல்லாம் அஜித், விஜய் படங்களை திரையிட்டது உண்டு.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ திரைப்படம் ஒரு திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய வரலாறு உண்டு. இதையெல்லாம்விட ரஜினியின் படங்கள் இங்கு பல வரலாறுகளை படைத்துள்ளது என்பது வேறு விஷயம்.

இப்படி தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு உள்ள பரபரப்பு தற்போது பிரபாஸ் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாகுபலி-2’ படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒருசில திரையரங்குகள் அதிகாலை 4.30 மணி சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் அதிகாலையிலேயே இப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டாததால் அந்த திரையரங்குகள் தற்போது அதிகாலை 4.30 காட்சிகளை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. என்னதான் பிரம்மாண்டம், அதிநவீன தொழில்நுட்பங்கள் என்று பல்வேறு எதிர்பார்ப்புடன் உருவாகியிருந்தாலும், ரஜினி, அஜித், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் போட்டி போட முடியாத நிலைமைதான் தற்போது ‘பாகுபலி-2’ க்கு உருவாகியுள்ளது என்பதுதான் உண்மை.