பாகுபலி-2 டிக்கெட் வாங்க 3 கி.மீ. தூரம் காத்திருந்த ரசிகர்கள்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் நாளை வெளியாகவிருக்கிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் இந்த இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பதற்கு இந்த பாகத்தில் விடை கிடைக்கும் என்பதால், ரசிகர்களும் முதல்நாளே முதல் காட்சி பார்த்துவிட துடிக்கிறார்கள். எனவே, திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய இன்று காலை முதலே ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ‘பாகுபலி-2’ படத்தின் டிக்கெட் வாங்குவதற்காக 3 கிலோ மீட்டர் தூரம் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளனர். ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையரங்கமான பிரசாத் ஐமேக்சில் இன்று ரசிகர்கள் டிக்கெட் எடுக்க ஆர்வமுடன் குவிந்தனர்.