பாகுபலி-2 வெளியாவதில் இருந்த சிக்கல் முடிவுக்கு வந்தது: தமிழகத்தில் படம் வெளியாகிறது

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள ‘பாகுபலி-2’ படம் இன்றுமுதல் உலகம் முழுவதும் வெளியாவதாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகும் என்ற அறிவிப்போடு திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்புடன் நடந்தது.

இப்படத்தை காண ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், பட விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இப்படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ‘பாகுபலி-2’ சிறப்புக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து, விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் படத்தை வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தற்போது சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, திரையரங்குகளில் இப்படத்தை திரையிடுவதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி காட்சிகள் திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 650 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. தமிழ் பதிப்பிற்குத்தான் இந்த பிரச்சினையே தவிர, ‘பாகுபலி-2’ தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.