கேரளாவில் குறைந்த செலவிலேயே திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. மலையாள பட உலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி போன்றோரின் படங்கள் கூட சில கோடி செலவிலேயே தயாரிக்கப்படுகிறது. மேலும் மலையாளப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் 100-க்கும் குறைவாகவே இருக்கும்.
சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘புலிமுருகன்’ படம் தான் மலையாள பட உலகில் அதிக பொருட்செலவில் வெளியான சினிமா என்ற சாதனையை படைத்து இருந்தது. இந்த படமும் கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
இந்த நிலையில் கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியான படம் என்ற புதிய சாதனையை பிரபாஸ், ராணா , அனுஷ்கா, தமன்னா நடித்துள்ள பாகுபலி-2 படம் படைத்து உள்ளது. இந்தப்படம் கேரளாவில் இன்று 290 தியேட்டர்களில் வெளியானது.
மேலும் சில தியேட்டர் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் 330 தியேட்டர்கள் வரை பாகுபலி-2 வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக வினியோகஸ்தர்கள் தெரிவித்து உள்ளனர்.