வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
ஐ.நா. சபையும் வட கொரியாவுக்கு எதிரான பொருளாதார தடை விதித்துளளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வட கொரியாவுக்கு கடும் எச்ச ரிக்கை விடுத்து இருந்தார்.
அதை பொருட்படுத்தாத வடகொரியா உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. தலைநகர் பியாங்யாங் அருகேயுள்ள பக்சாங் என்ற இடத்தில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
ஆனால் ஏவப்பட்ட சில வினாடிகளில் அது சீறி பாயாமல் வட கொரியாவுக்குள்ளேயே எரிந்து விழுந்து விட்டது. எனவே இச்சோதனை தோல்வி அடைந்துவிட்டது என தென் கொரியாவும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளன.
சோதனை நடத்தப்பட்ட ஏவுகணை எத்தகைய ரகத்தை சேர்ந்தது என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்து விட்டது. அவர்களுக்கு இது கெட்ட நேரம் என தெரிவித்துள்ளார்.