செல்வம் அருளும் அட்சய திருதியைக்கு விரதம் இருப்பது எப்படி?

அட்சயம்’ என்பதற்கு ‘வளர்வது’ என்று பொருள். அட்சய திருதியை நாளில் எந்த பொருள் வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. அதனால்தான் அன்றைய தினம் மக்கள் பலரும் தங்கம் வாங்கப் போட்டி போடுகின்றனர். செல்வத்தை அள்ள அள்ளக் குறையாதபடி தரும் மகத்துவம் மிக்க திருநாள் இது என்று கூறப்படுகிறது. தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, துணிமணிகள், விலை உயர்ந்த பொருட்கள் போன்றவை வாங்கினாலும் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

திதிகளில் பவுர்ணமி அல்லது அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதி ‘திருதியை’ ஆகும். சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திருதியை திதி ‘அட்சய திருதியை’ எனப்படுகிறது.

பாண்டவர்கள் வனவாசத்தின்போது உணவுப் பொருட்களை அள்ள, அள்ள குறையாத அட்சய பாத்திரம் பெற்றதும், மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றதும் இந்தநாளில் தான். மகாவிஷ்ணுவின் மார்பில் திருமகள் என்றும் நீங்காமல் இருக்கும் வரத்தை அட்சய திருதியை தினத்தன்று பெற்றாள். வேதவியாசர் சொல்லச்சொல்ல விநாயகர் மகா பாரதத்தை எழுத தொடங்கியதும், குபேரன் மகா லட்சுமியை வணங்கி வற்றாத செல்வமுள்ள சங்க நிதி, பதுமநிதியை பெற்றதும், பகிரதன் தவம் இருந்து புண்ணிய நிதியான கங்கை நதியை சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வரவழைத்ததும் இந்த நாளில் தான் எனக் கூறப்படுகிறது.

அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வரிய லட்சுமி, தானிய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்த தாக புராணங்கள் கூறுகின்றன.

அன்றைய திருதியை நாளில் புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைக் கொடுக்கும். அன்றைய தினம் ஏழைகளுக்கு செய்யும் தானம், பன்மடங்கு புண்ணியத்தை தரும். அன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பலதலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த நமது மூதாதையர்களுக்கு போய் சேரும். அன்று பித்ரு கடன் கொடுப்பது முக்கியமாகும். இதனால் வறுமை நீங்கி வளமான வாழ்க்கை அமையும்.

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை வணங்கி துதிபாடல் பாடி பூஜிக்க வேண்டும். இதனால் செல்வம் பெருகும். அன்று செய்யும் தான, தர்மத்தால் மரண பயம் நீங்கும். குழந்தைகளின் கல்வி மேம்படும். மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பரமசிவன், பார்வதி, அன்னபூரணி, கலைமகள், குபேரன் ஆகியோரை வணங்கி நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்வில் வளம்பெருகும்.

திருமாலை நெல், அரிசியுடன் வணங்கி விரதம் இருக்க வேண்டும். முடிந்தவர்கள் கங்கை நதியில் நீராடுவது விசேஷம். விசிறி, அரிசி, உப்பு, நெய், சர்க்கரை, காய்கறிகள், புளி, பழம் ஆகியவற்றை தானமாக வழங்கலாம்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள விளாங்குளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ஈசன் அருளால் சனீஸ்வரர் ஊனம் நீங்கப்பெற்றார். இவரை அட்சய திருதியை அன்று வணங்கி சனீஸ்வரனுக்கு சந்தனகாப்பு செய்து வழிபட்டாலும், இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டாலும் செல்வச்செழிப்பு ஏற்படும்.

அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள்கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத்தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் விபத்து, அகால மரணத்தை தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால் வாழ்வு வளம் பெரும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பு கிடைக்கும்.

விரதம் இருப்பது எப்படி?

அட்சய திருதியை தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பின்னர் கோலத்தின் மீது பலகை வைத்து அதில் கோலம்போட்டு, ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போடவும். சொம்பில் நீர்நிரப்பி அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு அதன்மீது தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து கலசமாக தயார் செய்து பலகை மீது வைக்கவும்.

இதற்கு முன் கோலம் போட்டு நுனிவாழை இலையில் அரிசியை பரப்பி அதன்மீது விளக்கு ஏற்றி வைக்கவும். மஞ்சள் பிள்ளையார் பிடித்து குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள் மற்றும் புதிதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனை முடிந்த பிறகு தூப, தீபம் காட்டி பால்பாயாசம், நைநேத்தியம் செய்யலாம். இவ்வாறு பூஜை செய்தால் அளவற்ற பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.

அன்று மாலை சிவாலயம் சென்று தரிசனம் செய்யலாம். அன்று ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம் பலமடங்கு வளர்ந்து புண்ணியத்தை கொடுக்கும். இந்நாளில் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். மகாலட்சுமி படம் முன்பு நெய்தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பின்னர் கலசத்துக்கு தீபாராதனை செய்துவிட்டு கலசத்தை வடக்கு பக்கமாக நகர்த்தி வைத்து விரதம் இருக்க வேண்டும். இந்த நாளில் திரவ உணவு மட்டும் உட்கொள்வது சிறப்பான பலனைத் தரும்.