மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா, தனது அளப்பரிய படைப்பாற்றலை எண்ணி கர்வம் கொண்டார். தானும் சிவபெருமானுக்கு நிகரானவன் என ஆணவம் கொண்டார். அந்த அகந்தை பிரம்மனின் ஞானத்தை மறைத்தது. அது அவருடைய நான்கு முகங்களான சதுர்வேதத்தையும் செயல் இழக்கச் செய்தது. ஐந்தாவதாக ஒரு முகம் வெறும் கர்வமுகமாக தனியே புடைத்தெழுந்தது. நான்முகனின் கர்வத்தை அகற்றி ஞான தீபமேற்ற இறைவன் திருவுளம் கொண்டார்.
இதையடுத்து சிவபெருமானிடம் இருந்து புறப்பட்ட சக்தி ஒன்று, பைரவர் ரூபமாக மாறியது. பிரம்மனின் ஐந்து சிரசுகளில் கர்வ முகமானதை பைரவர் கிள்ளினார். அப்போது பைரவர் கையில் பிரம்ம கபாலம் ஒட்டிக்கொண்டது. பிரம்மனும் தன் தவறு தெளிந்து நான்முகன் ஆனார். சிவனின் அம்சம் கொண்டதால், அவரது பிரிய தேவதையாக விளங்குகிறார் பைரவர்.
அகந்தை உள்ளவர்கள் தேவர்களே ஆனாலும் பைரவர் தரும் தண்டனையில் இருந்து தப்பமுடியாது. தீய எண்ணத்தோடு பிறர் செய்யும் இடையூறுகளில் இருந்து நல்லவர்களை காப்பாற்றுவதே இவரது அருட்பணியாகும். எனவேதான் கர்ம வினைகளின் படி உயிர்களுக்கு நல்லதையும், கெட்டதையும் வழங்கும் சனிபகவானுக்கு, பைரவர் குருவாக விளங்குகிறார்.