சொந்த மண்ணில் நாங்கள் சிங்கம்: டெல்லியை வீழ்த்தி மீண்டும் நிரூபித்தது கொல்கத்தா

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டெல்லி அணியின் ஸ்கோர் 4.5 ஓவரில் 48 ரன்னாக இருக்கும்போது கருண் நாயர் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து சஞ்சு சாம்சன் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரைசதம் அடித்த சாம்சன் 38 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது டெல்லி அணி 14 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த பந்த் 6 ரன்னிலும், அய்யர் 47 ரன்னிலும் வெளியேற டெல்லி அணியின் ஸ்கோர் உயர்வில் மந்தநிலை ஏற்பட்டது.

கிறிஸ் மோரிஸ் 11 ரன்னும், கோரி ஆண்டர்சன் 2 ரன்னும், அங்கித் பவ்னி அவுட்டாகாமல் 12 ரன்னும் எடுக்க டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. கடைசி 36 பந்தில் 37 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் சுனில் நரைன், காம்பீர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சுனில் நரைன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து உத்தப்பா களம் இறங்கினார்.

6-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை உத்தப்பா லெக் சைடு தூக்கி அடித்தார். பந்து எட்ஜ் ஆகி வானத்தை நோக்கி பறந்தது. மிஸ்ரா மற்றும் சஞ்சு சாம்சன் பந்தை பிடிக்க ஓடினார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நான் பிடித்துக் கொள்கிறேன் என்று சைகை காட்டி ஒடி வந்தனர். பந்து அருகில் வரும்போது இருவரும் பிடிக்காமல் அப்படியே நின்று விட்டனர். இதனால் 10 பந்துகளில் 8 ரன்னோடு வெளியேற வேண்டிய உத்தப்பா கண்டத்தில் இருந்து தப்பினார்.

அப்போது கொல்கத்தா அணி 5.3 ஓவரில் 37 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தனக்கு கண்டம் தப்பியதையடுத்து உத்தப்பா ருத்ரதாண்டவம் ஆடினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி விளாசிய அவர், 8-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி பறக்க விட்டார். கம்மின்ஸ் வீசிய 9-வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி பறக்கவிட்டார்.

அத்துடன் 24 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய உத்தப்பா, 33 பந்தில் 55 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். கேட்சில் இருந்து தப்பிய உத்தப்பா, 25 பந்தில் 47 ரன்கள் குவித்துவிட்டார்.

உத்தப்பா அவுட்டை தொடர்ந்து மணீஷ் பாண்டே களம் இறங்கினார். மறுமுனையில் காம்பீர் 39 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 139 ரன்னாக இருக்கும்போது மணீஷ் பாண்டே ஆட்டம் இழந்தார். 4-வது விககெட்டுக்கு காம்பீர் உடன் ஜாக்சன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. கொல்கத்தா அணி 16.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காம்பீர் 71 ரன்னுடனும், ஜாக்சன் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 9 போட்டியில் 7 வெற்றிகளை ருசித்துள்ளது.