அதிரடி சூரர்களை உள்ளடக்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏனோ இந்த முறை உதைமேல் உதை வாங்கிக் கொண்டிருக்கிறது. 9 ஆட்டங்களில் 6-ல் தோற்றுள்ள அந்த அணி இதுவரை 5 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் 213 ரன்கள் (குஜராத்துக்கு எதிராக) குவித்து பிரமாதப்படுத்திய பெங்களூரு அணி இன்னொரு ஆட்டத்தில் 49 ரன்களில் (கொல்கத்தாவுக்கு எதிராக) சுருண்டு அதல பாதாளத்துக்கும் சென்று விட்டதை பார்க்க முடிந்தது.
வீரர்கள் பொறுப்புடன், முழு உத்வேகத்தை வெளிப்படுத்தவேண்டும் என்று கேப்டன் கோலி அறிவுறுத்தியுள்ளார். எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். இது வாழ்வா-சாவா? ஆட்டம் என்பதால் பெங்களூரு அணி எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
புனே சூப்பர் ஜெயன்ட் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றி கண்டு ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறது. ஒரு நாளில் மெச்சும்படி ஆடுகிறார்கள். இன்னொரு நாளில் சாதாரணமாக விளையாடுகிறார்கள். இது தான் புனே அணிக்கு உள்ள பிரச்சினை. இந்த குறையை களைய வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே பெங்களூருவை 27 ரன்கள் வித்தியாசத்தில் பதம் பார்த்த புனே சூப்பர் ஜெயன்ட் அணி சொந்த ஊரிலும் ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டும்.