உழைப்பு கசப்புதான்… பலன் இனிப்பு : ஜெ. பாணியில் மே தின வாழ்த்து சொன்ன எடப்பாடி பழனிச்சாமி!

உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள் கசப்பாக இருந்தாலும் அதன் கனிகள் இனிப்பானவை என்பதை உணர்ந்து சோம்பலை நீக்கி கடினமாக உழைத்தால் வாழ்வில் உயர்வு பெறலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மே தின வாழ்த்து கூறியுள்ளார்.

உழைப்பாளர்களின் மேன்மையைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் மே முதல் தேதியில் தொழிலாளர் தினம் கொண்டாப்படுகிறது.

உலகம் முழுவதும் மே 1ஆம் தேதியையே தொழிலாளர் நாளாக கடைபிடிக்கின்றன. நாளை இந்த ஆண்டின் மே தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் தனது வாழ்த்துச் செய்தியை கூறியுள்ளார்.

உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களின் உன்னத திருநாளாம் மே தின நன்னாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “மே தின” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.’

உழைப்பாளர்களால் இந்த உலகம், உழைப்பாளர்களுக்கே இந்த உலகம்’ என்பதை வலியுறுத்தும் வகையில், முதன்முதலில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக போராடத் தொடங்கிய மே 1ஆம் நாளை உலகமே நினைவு கூறும் வகையில் தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

உழைக்கும் மக்களின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றுகின்ற இந்த மே தினத் திருநாளில், ‘உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள் கசப்பாக இருந்தாலும் அதன் கனிகள் இனிப்பானவை என்பதை உணர்ந்து, சோம்பலை நீக்கி, கடினமாக உழைத்தால் வாழ்வில் உயர்வு பெறலாம்’ என்ற புரட்சித் தலைவி அம்மாவின் வாக்கை மனதில் நிறுத்தி அனைவரும் நம்பிக்கையோடு உழைத்தால் நாடும் வீடும் வளம் பெறும்.

தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, என் அன்புக் குரிய தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த ‘மே தின’ நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.