அ.தி.மு.க. இணைப்பு பேச்சுவார்த்தை: ஓ.பன்னீர்செல்வம் திடீர் தயக்கம்!!

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இதோ இணைய போகிறது, அதோ இணைய போகிறது என்று பரபரப்பை உருவாக்கினார்கள்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும், சசிகலா தரப்பில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் நாளை தொடங்கும் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்ததுதான் மிச்சம். ஆனால் இதுவரை பேச்சு வார்த்தை நடக்கவில்லை.

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். சசிகலா, தினகரன் குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும், சசிகலா பொதுச் செயலாளர் என்று தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தை திரும்ப பெற வேண்டும் என்று மூன்று முக்கிய நிபந்தனைகளை ஓ.பன்னீர்செல்வம் விதித்துள்ளார்.

தினகரன் கட்சியை விட்டு ஒதுங்குவதாக அறிவித்து விட்டார். பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா பேனர்களும் அகற்றப்பட்டன.

வெளிப்படையாக இப்படி சில சம்பவங்கள் நடந்தாலும் திரைமறைவில் சசிகலா, தினகரனுக்கு ஆதரவாகத்தான் இருக்க வேண்டும். தினகரன் ஜெயிலுக்கு சென்றால் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற நடவடிக்கைகள் தொடர்ந்தன.

இதை மோப்பம் பிடித்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிர்ச்சி அடைந்தனர். இணைப்பு என்ற பெயரில் நாம் பலியாடுகளாக ஆகி விடக்கூடாது என்று ஓ.பி.எஸ். தரப்பு உஷார் ஆனது.

இருந்தாலும் இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். கட்சி ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தோடு இணைப்பு முயற்சியை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தினார்கள். நள்ளிரவில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருதரப்பை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இருவர் சந்தித்து பேசினார்கள்.

இதையடுத்து இணைப்பு பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான நேரம் குறித்தனர்.

நேற்று பகல் 11.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் முக்கிய அறிவிப்பு வெளியிடப் போவதாக பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.

திடீரென்று பத்திரிகையாளர் சந்திப்பு 2 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்தனர். மீண்டும் ஒரு மணியளவில் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் முக்கிய அறிவிப்பை வெளியிட முடிவெடுத்தும் அறிவிக்க முடியாமல் தயங்கியது பற்றி விசாரித்தபோது பல தகவல்கள் வெளியானது.

சசிகலா குற்றவாளியாக ஜெயிலில் இருப்பதும், தினகரன் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பதாலும் அந்த குடும்பத்தை அதிகாரப்பூர்வமாக நீக்காமல் இணைந்தால் கெட்ட பெயர் ஏற்படும்.

மேலும் கொடநாடு சம்பவம் மர்மம் நிறைந்ததாக நீள்கிறது. இன்னும் என்னென்ன வெளிவரப் போகிறதோ? எனவே பொறுத்திருப்போம் என்று கட்சி நிர்வாகிகள் எடுத்துக் கூறி இருக்கிறார்கள்.

காலம் கடத்துவதற்கு வசதியாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கவனத்தை திருப்புவோம் என்று தெரிவித்துள்ளார்கள்.

மேலும் தற்போதைய நிலையில் இணைப்பு பற்றி தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

எனவே மாவட்ட வாரியாக தொண்டர்கள் கருத்தை அறிய ஓ.பி.எஸ். திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இணைப்பு பேச்சுவார்த்தை இப்போதைக்கு தொடங்காது என்றே கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.