பிரிட்டன் டூ சீனா: 12 ஆயிரம் கி.மீ தூரத்தை இருபது நாட்களில் கடந்து இலக்கை எட்டிய ரெயில்

பிரிட்டன் – சீனா இடையே உள்ள ரெயில் தடமானது உலகின் இரண்டாவது மிக நீளமான ரெயில் தடமாகும். இத்தடத்தில் ’ஈஸ்ட் விண்ட்’ சரக்கு ரெயிலானது விஸ்கி, பால், மருத்துவ பொருட்களுடன் கடந்த 10-ம் தேதி பிரிட்டனின் லண்டனில் இருந்து புறப்பட்டது.

இந்த சரக்கு ரெயில் தன்னுடைய பயணத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா, கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் கடந்து 20 நாட்கள் பயணமாக இன்று காலை சீனாவின் யிவூ நகருக்குள் நுழைந்தது. இந்த நகரம் சீனாவின் முக்கிய மொத்த விற்பனை மையமாகும்.

விமான போக்குவரத்தை காட்டிலும் மிக குறைந்த செலவே எடுத்துக் கொள்வதால் சீனா இத்தகைய போக்குவரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. மேலும், கப்பலில் சரக்குகளை எடுத்துச் செல்வதால் பயண காலம் அதிகமாக எடுத்துக் கொள்வதாலும் சீனா ரெயில் போக்குவரத்தில் ஆர்வம் காட்டுகிறது.

கப்பலைக் காட்டிலும் 30 நாட்கள் முன்னதாகவே இந்த ரெயில் தனது இடத்தை வந்தடைகிறது. சாதாரணமாக 18 நாட்களில் லண்டனிலிருந்து சீனாவுக்கு வருமாறு திட்டமிடப்பட்டது, ஆனால் இந்தச் சோதனை ஓட்டத்தில் 20 நாட்களாகியுள்ளது. இந்த ரெயிலில் 88 ஷிப்பிங் கண்டெய்னர்களையே ஏற்றி வர முடியும், ஆனால் கப்பலில் 10,000 முதல் 20,000 கண்டெய்னர்களைக் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக நீண்ட தூர ரெயில் சேவையாக சீனா ஏற்கெனவே ஜெர்மனியின் மேட்ரிட் நகருக்கு இத்தகைய சரக்கு ரெயிலை இயக்கி வருவதும் ஆச்சரியப்படுத்தும் செய்தியே!.